ராஜஸ்தானில் ஒரு விவசாயின் 3 மகள்கள் ஒரே நேரத்தில் அரசுப் பணிக்கு தேர்வாகி அசத்தியுள்ளனர். அரசு அதிகாரிகளின் குடும்பமாகவே இப்போது அந்த விவசாயின் குடும்பம் மாறியிருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சாதேவ் சஹாரன். இவருக்கு ஐந்து மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் ரோமா, 2010-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநில அரசு பணி தேர்வாணைய தேர்வுகளில் வென்று அம்மாநில அரசுப் பணியில் இணைந்தார். தற்போது ஜுன்ஜுனு மாவட்டத்தில் சுஜன்கரில் தொகுதி மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வரும் இவர்தான் அந்த குடும்பத்தின் முதல் அரசு அதிகாரி.
இதையடுத்து சாதேவ்வின் இரண்டாவது மகள் மஞ்சுவும் 2017-ம் ஆண்டு அம்மாநில அரசுப் பணிக்கான தேர்வில் வெற்றிபெற்று அசத்தினார். இவர் இப்போது ஹனுமன்கரின் நோஹரில் உள்ள கூட்டுறவுத் துறையில் பணியாற்றுகிறார்.
இந்த நிலையில்தான் சமீபத்தில் நடந்து முடிந்த அம்மாநில அரசுப் பணி தேர்வில் சாதேவ் சஹாரனின் அடுத்த மூன்று மகள்களும் தேர்வாகி உள்ளனர். அவருடைய அடுத்த மூன்று மகள்கள் அன்ஷு, ரீது, சுமன் ஆகியோர் தற்போதைய தேர்வில் தேர்வாகி இருக்கின்றனர். கடந்த 2018-ல் இந்த தேர்வுகள் நடந்தது. இதன்முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதன்மூலம் இப்போது, இந்த ஐந்து சகோதரிகளும், ராஜஸ்தான் நிர்வாக சேவை (ஆர்ஏஎஸ்) அதிகாரிகளாக மாறியிருக்கின்றனர்.
இந்த தகவலை இந்திய வன சேவை (ஐஎஃப்எஸ்) அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டரில் பகிர, தற்போது அந்த சகோதரிகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
"ஒரு நல்ல செய்தி. ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த அன்ஷு, ரீது, சுமன் ஆகிய மூன்று சகோதரிகள் ஆர்ஏஎஸ் தேர்வில் வென்றுள்ளனர். இவர்களின் சகோதரிகள் ரோமா, மஞ்சி ஏற்கெனவே ஆர்ஏஎஸ் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தங்களின் பெற்றோர்களை பெருமைப்பட வைத்துள்ளார்கள்" என்று நெகிழ்ந்து கூறியுள்ளார்.
இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த சகோதரிகளின் தந்தை விவசாயி சாதேவ் சஹாரன் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அவரின் தாய்க்கு படிப்பறிவு என்பது இல்லை. இந்த நிலையில்தான் தனது ஐந்து மகள்களையும் அரசு அதிகாரிகளாக உயர்த்தி இருக்கிறார். இவர்கள் தேர்வான தகவல், அந்தப் பகுதியில் பரவ தற்போது இது அங்கு கொண்டாட்டமாக மாறியுள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இந்த குடும்பத்துக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.