தமிழகத்தில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே பொதுத்தேர்வு நடத்தப்படும் என அரசுத்தேர்வுகள் இயக்குநர், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகாலமாக நேரடியாக வகுப்புகள் நடைபெறாத நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மீண்டும் நோய்த்தொற்று அதிகரித்ததன் காரணமாக ஜனவரி மாதத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு, பின்னர் கொரோனா குறைந்ததும், பள்ளிகள் முழுமையாக 1 முதல் 12-ம் வகுப்பு வரை திறக்கப்பட்டது. தொடர்ந்து தற்போது நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் இந்த ஆண்டு மே மாதம் இறுதி வரை நடைபெறுகிறது. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பின்படி, 12-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மே 5-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி முடிவடைகிறது.
11-ம் வகுப்பு மாணவர்களுக்கு, மே மாதம் 9-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரையும். 10-ம் வகுப்புகளுக்கு மே மாதம் 6-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரையிலும் நடக்க இருக்கிறது. அத்துடன், 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13-ம் தேதி கடைசி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே பொதுத்தேர்வு நடத்தப்படும் என அரசுத்தேர்வுகள் இயக்குநர், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது குறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
"2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே, மேல்நிலை (முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு) இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு, மே 2022-க்கான வினாத்தாள்கள் வழங்கப்படும்.
எனவே, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தினை அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கி, பாடங்களை விரைந்து முடிக்க அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.