அக்டோபர் 1 முதல் பள்ளிக்குச் செல்ல அனுமதி... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

அக்டோபர் 1 முதல் பள்ளிக்குச் செல்ல அனுமதி... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
அக்டோபர் 1 முதல் பள்ளிக்குச் செல்ல அனுமதி...  வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
Published on

தமிழகத்தில் 10 முதல் பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்பு மாணவர்கள் விருப்ப அடிப்படையில் பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இரண்டு குழுக்களாகப் பிரிந்து வாரத்துக்கு மூன்று நாள்கள் பள்ளிக்கு வருவதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ளார். மாணவர்கள் பள்ளிக்கு வருவது தொடர்பாக சில வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

பத்து முதல் பிளஸ் டூ வரையிலான மாணவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படுவர். ஒரு குழுவினர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும் மற்றொரு குழுவினர் செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளிலும் பள்ளிக்கு வரலாம்.

ஆசிரியர்களும் இரண்டு குழுக்களாகப் பிரிந்து மாணவர்களுக்கு வகுப்புகளை எடுக்கவேண்டும். முதல் குழு திங்கள், செவ்வாய்க் கிழமைகளிலும், இரண்டாவது குழு புதன் மற்றும் வியாழக்கிழமைகளிலும் வகுப்புகளை எடுக்கும்.

கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையிலேயே மாணவர்கள் வரலாம். இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலரிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக சான்றொப்பம் பெறப்படும். அதேநேரம், இணையவழியிலான கல்விமுறையும் தொடர்ந்து நடைபெறும்.

வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றவேண்டும். எந்த இடத்திலும் நெரிசல்கள் இருக்கக்கூடாது. வகுப்பறைக்குள் ஆறு அடி இடைவெளியுடன் மாணவர்கள் அமரும் வகையில் இருக்கைகளை அமைத்திட வேண்டும்.

மாணவர்கள் மொத்தமாக கூடுவது, விளையாட்டு நிகழ்வுகள் தவிர்க்கப்படவேண்டும். வானிலை ஒத்துழைக்கும்பட்சத்தில் நல்ல இடைவெளியுடன் இயற்கைச் சூழலில் வகுப்புகளை நடத்தலாம்.

மாணவர்களும் ஆசிரியர்களும் கிருமி நாசினியால் கைகளைச் சுத்தம் செய்த பின்னரே வகுப்புக்குள் அனுமதிக்கப்படவேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்துவரவேண்டும்.

பயோமெட்ரிக் முறைக்குப் பதிலாக மாற்று ஏற்பாடு செய்யவேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்களின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதிக்கவேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவர்கள் நோட்டுப் புத்தகங்கள், அழிப்பான், பேனாக்கள், பென்சில்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை தனித்தனியாக வைத்திருக்கவேண்டும். அவற்றை மாணவர்களுக்குள் பகிரக்கூடாது என வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com