சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வீலிங் செய்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளான யூட்யூபர் TTF வாசனின் ஓட்டுநர் உரிமம், 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இதுகுறித்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், பாதசாரிகள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்படுதல் போன்றவை உட்பட பல வழக்குகள் டிடிஎஃப் வாசனின் மீது காஞ்சிபுரம், கடலூர், நீலகிரி உட்பட பல மாவட்டங்களில் நிலுவையில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இமாச்சல பிரதேசத்தில்கூட அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக இவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்படியான சூழலில்தான் சமீபத்தில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வீலிங் செய்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானார் வாசன்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் அவர்மீது காஞ்சிபுரம் பாலுசெட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே தமிழக அரசின் காஞ்சிபுர வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஸ்ரீபெரும்புதூர் அருகில் விபத்து நடந்த உடனே ஒரு வார காலத்திற்கு ஷோகாஸ் நோட்டீஸை இவருக்கு அனுப்பினார்.
அதற்கு டிடிஎஃப் வாசன் சரியான பதில் கொடுக்காததால் அவகாசம் முடிந்ததையடுத்து 10 ஆண்டுகளுக்கு அதாவது 6.10.2023 - 5.10.2033 வரை இவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து காஞ்சிபுர வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.