கோவையில் நகைக்காக பெரியம்மாவை கொலைசெய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கோவை குண்டு வெடிப்பு விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை ஆனைமலையை அடுத்த ஒடையகுளத்தை சேர்ந்தவர் ரவிபிரகாஷ் (32). கம்ப்யூட்டர் சிஸ்டம் அண்ட் பிரின்ட்டர் சர்வீஸ் தொழில் செய்துவந்த இவர், தொழிலை விரிவுபடுத்துவதற்காக பலரிடம் கடன் கேட்டுள்ளார். இதன்மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் ரூபாய் 85 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். ஆனால், தொழிலில் போதிய வருவாய் கிடைக்காத நிலையில், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, கடனை எப்படியாவது அடைக்கவேண்டும் என ரவிபிரகாஷ் முடிவு செய்துள்ளார். இந்நிலையில், ஒடையகுளம் சவுடம்மன் கோயில் வீதியில வசிக்கும் தனது பெரியம்மா அருக்காணி என்ற அருக்காத்தாள் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ரவிபிரகாஷ், அவருடைய முகத்தை பெட்ஷீட்டால் மூடி கழுத்தை இறுக்கி கொலை செய்தார். அவர் அணிந்திருந்த கம்மல், தாலிக்கொடி என 7 பவுன் நகைகளை திருடிய ரவிபிரகாஷ் அங்கிருந்து தப்பிவிட்டார். அந்த நகையை அடமானம் வைத்து கடனை திருப்பி செலுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஆனைமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின் 2018 மே 12ஆம் தேதி ரவிபிரகாஷை கைது செய்தனர்.
வங்கியில் அடமானம் வைத்த நகைகளை, திருப்பியபோது ரவி பிரகாஷ் காவல்துறையினரிடம் பிடிபட்டார். இந்த வழக்கு கோவை குண்டுவெடிப்பு சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பாலு, ரவிபிரகாஷூக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூபாய் 15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.