கோவையில் சாப்பிடும் போது ஊறுகாயை மறைத்து வைத்த ஆத்திரத்தால் தன்னுடன் வேலைபார்க்கும் சிறுவனை அடித்துகொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கோவையில் ஆவாரம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தொழில் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பணி செய்து வருகின்றனர். இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சித்துகுமார்(17) மற்றும் பஜிரங்கி குமார்(20) ஆகியோரும் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு பணிபுரியும் நபர்களுக்கு கடையின் மாடியில் தங்குவதற்கான இடம் தயார் செய்து கொடுத்துள்ளனர்.
இதனிடையே சித்துகுமாருக்கும் பஜிரங்கி குமாருக்கும் உணவு சமைப்பதில் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று உணவு சாப்பிடும்போது சமைத்த குழம்பு பற்றாமல் போக பஜ்ரங்கிகுமார், சித்துகுமாரிடம் ஊறுகாய் கேட்டுள்ளார். ஆனால் சித்துகுமார் ஊறுகாயை மறைத்து வைத்துவிட்டு விளையாட்டு காட்டியுள்ளார்.
இது வாக்குவாதத்தில் ஆரம்பித்து இருவருக்கு இடையே கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது பஜிரங்கிகுமார் ஊறுகாய் கிடைக்காத கோபத்தினால் சித்துகுமாரை பிடித்து தாக்கியுள்ளார். இதில் சித்துகுமார் கீழே மயங்கி விழுந்துள்ளார். அதன்பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சித்துகுமார், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பீளமேடு காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து பஜிரங்கிகுமாரை கைது செய்து சிறையிலடைத்தனர்.