வாணியம்பாடி அருகே மனைவி பிரிந்து வெளிநாடு சென்றதால் மனைவியின் சகோதரி மீது வசிய மருந்து ஊற்றி காதல் வலையில் சிக்க வைக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் படித்துள்ள இவர், அதே பகுதியைச் சேர்ந்த செவிலியரான தேன்மொழி என்பவரை ஒன்றரை வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மாதத்திற்கு முன்பு கணவனை பிரிந்து வசித்து வந்த தேன்மொழி, செவிலியர் பணிக்காக வெளிநாடு சென்றுள்ளார். இந்நிலையில் ராஜேஷ், மனைவி தேன்மொழியின் சகோதரியான தமிழ் மொழியின் வீட்டிற்குச் சென்று, கையில் மறைத்து வைத்திருந்த திரவத்தை தமிழ் மொழி மீது ஊற்றியுள்ளார்.
உடனடியாக தமிழ் மொழி, ‘என்மீது ஏதையோ ஊற்றி விட்டார்" என கூச்சலிட்டு கதறியுள்ளார். உடனடியாக அங்கிருந்த கிராம மக்கள் ஒன்று கூடி அமிலம் (Acid) ஆக இருக்கக்கூடும் என ஆலங்காயம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ் மொழியை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதையடுத்து அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இது அமிலம் அல்ல எண்ணெய் போன்று திரவம் என்று தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து ராஜேஷை கைது செய்த ஆலங்காயம் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததால் மனைவியின் சகோதரியை காதல் வலையில் சிக்க வைக்க வசிய மருந்து ஊற்றியதாக ஒப்புக் கொண்டார். அதன் பேரில் ஆலங்காயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்