சென்னை அசோக் நகர் 7-வது அவன்யூவில் திருஞானம் என்பவர், கடந்த 7 வருடங்களாக சாய்ராம் என்ற பெயரில் மருந்துக் கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம்போல் திருஞானம் மருந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை மருந்துக் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதாக, அருகிலிருந்த நபர்கள் திருஞானத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் மருந்துக் கடைக்கு விரைந்து வந்த திருஞானம், கடையில் சோதனை செய்துள்ளார். அப்போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ 1.50 லட்சம் பணம் மற்றும் சாக்லேட்டுகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து அசோக் நகர் போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திலிருந்த விரைந்து வந்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, மாஸ்க் அணிந்து கொண்டு வந்த இரண்டு இளைஞர்கள் கடப்பாரையை வைத்து கடையை உடைத்து உள்ளே சென்று, கள்ளாப்பெட்டியில் இருந்த பணம் மற்றும் சாக்லேட்டுகளை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. பின்னர் சிசிடிவி காட்சியை வைத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய இரண்டு இளைஞர்களையும் தேடி வருகின்றனர்.