கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த காட்டுமூக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (33). விவசாயியான இவர், வெயில் காலம் வெப்பம் அதிகமாக இருப்பதால், வீட்டில் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளார். வீட்டில் இருந்த அனைவரும் அசதியாக தூங்கியுள்ளனர். இந்நிலையில், அதிகாலை சுமார் 2 மணியளவில் வீட்டின் வெளியே கட்டில் போட்டு உறங்கிக்கொண்டிருந்த முதியவர் அண்ணாதுரை, வீட்டில் ஏதோ நடமாட்டம் இருப்பதை உணர்ந்து, லைட் போட்டுள்ளார். அப்போது, வெளிச்சம் காரணமாக அனைவரும் விழிக்கையில், 23 வயதுள்ள இளைஞர் வீட்டில் நின்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கத்தியுள்ளனர்.
அதற்குள்ளாக தப்பித்தது வெளியே ஓடிய இளைஞரை குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பிடித்து கட்டி வைத்தனர். இதையடுத்து மாரியப்பன் மத்தூர் காவல் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில், போலீசார் வந்து அந்த இளைஞரை பிடித்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில் கல்லாவி அடுத்த பெருமாள்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் (23) என்றும், அதே கிராத்தை சேர்ந்த அபிஷேக் (23) என்ற நண்பருடன் சேர்ந்து காட்டுமூக்கம்பட்டி கிராமத்தில் உள்ள முருகேசன் (27) என்ற நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு வந்தபோது, இரவில் வீடு புகுந்த திருட வந்ததாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து பிரசாந்த் திருடிய 1 சவரன் தங்க சங்கிலி அவருடைய கால்சட்டை பையிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அபிஷேக் மற்றும் முருகேசன் ஆகிய இருவரையும் பிடித்து வந்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.