வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கேரளாவையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வரதட்சணை தொடர்பான புகார்களை அளிக்க 24 மணி நேர ஹெல்ப்லைன் எண் ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார்.
கொல்லம் பகுதியில் ஆயுர்வேத மருத்துவம் படித்து வந்த விஸ்மயா என்பவருக்கும், கோட்டயத்தைச் சேர்ந்த உதவி மோட்டார் வாகன ஆய்வாளரான கிரண் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. புகுந்த வீட்டில் மிகவும் மகிழ்ச்சியாகத் தொடங்கிய விஸ்மயாவின் வாழ்க்கைப் பயணம் சில மாதங்களில் திசைமாறி துயரப் புயலில் சிக்கியுள்ளது. திருமணத்தின்போது கொடுத்த கார் வேண்டாம் அதற்கு பதிலாக பணத்தை வாங்கி வரும்படி கூறி, விஸ்மயாவை கிரண் துன்புறுத்தி வந்துள்ளார். விஸ்மயாவின் பெற்றோர் முன்னிலையிலேயே மதுபோதையில் இருந்த கிரண் அவரை மிகவும் மோசமாக தாக்கியுள்ளார். இதனால் அதிர்ந்து போன விஸ்மயாவின் தந்தை திருவிக்ரமன், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து இரு தரப்பினரும் சமாதானம் செய்து திரும்பியுள்ளனர். இந்நிலையில், கிரண் வீட்டில் இருந்த விஸ்மயா தனது உறவினருக்கு வாட்ஸ் ஆப் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும், தனது முடியை இழுத்து தாக்கியதாகவும், இது குறித்து யாரிடமும் சொல்லவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் காயத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இந்த வாட்ஸ் ஆப் உரையாடல் நிகழ்ந்த இரு தினங்களிலேயே கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் விஸ்மயாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. வரதட்சணைக் கொடுமையினாலேயே தனது மகளைக் கொலை செய்திருப்பதாக விஸ்மயாவின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். அதற்கான ஆதாரமாக வாட்ஸ் ஆப் பதிவுகளையும் கொடுத்துள்ளனர். கேரள மகளிர் ஆணையமும் இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதையடுத்து கிரணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விஸ்மயாவை தான் அடித்துத் துன்புறுத்தியதை ஒப்புக்கொண்டுள்ள அவர், இருவரும் சண்டை போட்ட பின்னர், விஸ்மயா தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். உடற்கூறு ஆய்வுக்குப் பின்னரே முழு விவரமும் தெரியவரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், வரதட்சணை தொடர்பான புகார்களை அளிக்க 24மணி நேர ஹெல்ப்லைன் எண் ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார்.