திருத்தணி அருகே ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய நிலையில், திருமணத்துக்கு முரண்டு பிடித்த காதலனை போலீசார் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், புஜ்ஜிரெட்டி பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி என்பவரின் மகள் பாலநாகம்மா (29). இவரது பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், தற்போது தனது சகோதரி வீட்டில் வசித்து வரும் இவர், திருத்தணி ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், பள்ளிப்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலம் (30) என்பவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்பு திருத்தணியில் உள்ள நுக்கால் அம்மன் கோயிலில் யாருக்கும் தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இதையடுத்து கர்ப்பமாக இருந்த பாலநாகம்மாவை மூன்று முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார் ஆதிமூலம். இந்நிலையில், கடந்த மாதம் 28 ஆம் தேதி வேறொரு பெண்ணை திருமணம் செய்ய ஆதிமூலம் மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதனை அறிந்த பாலநாகம்மா ஆதிமூலத்திடம் கேட்டதற்கு 10 சவரன் நகை 5 லட்சம் வரதட்சனை கொடுத்தால் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய ஆதிமூலம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவள்ளூர் மாவட்ட எஸ்பி. சிபாஸ் கல்யாணிடம் புகார் மனு அளித்துள்ளார். இதையடுத்து புகார் மனு மீது உரிய விசாரணை நடத்துமாறு திருத்தணி மகளிர் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி பரிந்துரை செய்தார். பின்னர் இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்திய மகளிர் போலீசாரிடம் ஆதிமூலம் பாலநாகமாவை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாலநாகம்மா மற்றும் அவரது உறவினர்கள் ஆதிமூலத்தை பாலநாகம்மாவிற்கு திருமணம் செய்து வைக்குமாறு மகளிர் காவல் நிலையத்திற்கு எதிரே திருத்தணி - பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய ஆதிமூலம் மீது திருத்தணி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகா வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.