இளைஞரை படுகொலை செய்து ஓடை மணலில் புதைப்பு - கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்!
முன்விரோதம் காரணமாக இளைஞரை படுகொலை செய்து ஓடை மணலில் புதைத்த சம்பவம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அயன்கோடு ஊராட்சிமன்ற தலைவராக இருப்பவர் செல்லப்பன். இவரது 23 வயது மகன் லிபின் ராஜா. இவர் டிப்ளமோ முடித்துவிட்டு தற்போது முதலாம் ஆண்டு சட்டம் பயின்று வந்தார். இவர்மீது அடிதடி வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் முன்விரோதத்தை சரிசெய்ய கடந்த 4ஆம் தேதி இவரது நண்பர்கள் லிபின்ராஜாவை சமாதானம் செய்துகொள்வோம் என்று அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதனை நம்பி லிபின் ராஜா தனது பைக்கில் நண்பர்களை சந்திக்க சென்றுள்ளார். அதன்பின்பு இரவு வெகுநேரம் ஆகியும் லிபின்ராஜா வீட்டுக்கு வராததால் செல்லப்பா தனது மகனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் மறுநாள் காலை நாகர்கோவில் நேசமணிநகர் காவல் நிலையத்தில் பைக்கில் சென்ற தனது மகனை காணவில்லை என புகார் அளித்தார். புகாரை விசாரித்த நேசமணி நகர் போலீசார் லிபின் ராஜா காணாமல் போனது குறித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரது செல்போனை சோதனை செய்து இறுதியாக யாரெல்லாம் அவருடன் கால் செய்தார்கள் என்ற விவரத்தை எடுத்து அவர்களை தேடியதாகக் கூறப்படுகிறது.
மேலும், தனிப்படை அமைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சிசிடிவி காட்சிகள் மூலமாகவும் தேடுதலை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் நேற்று 6ஆம் தேதி நெல்லை மாவட்டம் பழவூர் நான்கு வழிச்சாலை அருகிலுள்ள நீர்ஓடை மணலில் லிபின் ராஜா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தனிப்படை போலீசாருக்கு எழுந்தது. அவர்கள் சந்தேகித்தது போல் அந்த பகுதியில் இருந்து உடல் அழுகிய துர்நாற்றமும் வீச துவங்கியது.
மேலும் இந்த தகவலை செல்லப்பாவிற்கும் போலீசார் கூறினர். இதனையடுத்து செல்லப்பா நேற்று மதியம் முதலே புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் வந்து காத்திருந்தார். தாசில்தார் வருவதற்கு வெகு நேரமானதால் தாமதமாகி இன்று காலைதான் தோண்டி எடுக்கப்பட்டு அந்த இடத்திலேயே உடல் கூறு ஆய்வு செய்யப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணி முதலே அவரது தந்தை மற்றும் உறவினர்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் கூடினர். நேரம் செல்ல செல்ல அதிகமான மக்கள் அந்த பகுதியில் கூடினர். ஆனால் உடலை தோண்டி எடுப்பதற்கு எந்த முயற்சியும் நடக்கவில்லை என்று ஆவேசமடைந்தனர். பின்பு சாலைமறியலில் ஈடுபட முயன்றனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் அவரது தந்தையுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் விரைவாக புதைக்கப்பட்ட உடலை எடுத்துத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறினார். ஆனால் நேரம் அதிகமாகி விட்ட காரணத்தாலும் உடற்கூறு ஆய்வு செய்ய நான்கு மணி நேரம் தேவைப்படுவதால் உடல் தோண்டி எடுக்கப்படவில்லை மீண்டும் நாளை காலை 7 மணிக்கு தோண்டி எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. பிரச்னை ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும், அவர்களை அதிகாரிகள் சமாதனபடுத்தி நாளை காலை உறுதியாக தோண்டி எடுப்பதாகக் கூறியதை அடுத்து அங்கிருந்தவர்கள் கலைந்தனர். இதுகுறித்து அவரது தந்தை செல்லப்பா கூறியபோது, ’’என் மகனை கொலை செய்து இங்கே புதைத்துள்ளனர். அவரை இறுதியாக ஒருமுறையாவது பார்த்துவிட்டு நல்லடக்கம் செய்ய வேண்டுமென கடந்த இரு நாட்களாக தவமாய் தவமிருந்து வருகிறேன். அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆகின்ற தாமதம், என் மகனின் இறப்பை தாண்டிய வேதனையை அளிக்கிறது என்று கூறினார்.
மேலும், அதிகாரிகளிடம் கேட்டதற்கு, இறந்து நான்கு நாட்களாகி விட்டதால் சம்பவ இடத்தில் வைத்து 4 மருத்துவர்கள் முன்னிலையில்தான் உடற்கூறாய்வு செய்ய வேண்டும். ஆகையால் நெல்லையில் இருந்து டாக்டர்கள் வேறு பணிக்கு சென்றுவிட்டதால் தாமதம் ஏற்பட்டுவிட்டது. நாளை காலை உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்படும் என்றனர்.