கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உப்புமாவில் விஷம் கலந்து கல்லூரி பேராசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வெள்ளியோடு பகுதியை சேர்ந்தவர் பெல்லார்மின். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் இவருக்கும் வியன்னூர் பகுதியை சேர்ந்த திவ்யா சில்வெஸ்டர் என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில், தான் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அதனால் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடும்படியும் தனது மனைவி திவ்யாவிடம் பெல்லார்மின் கூறியுள்ளார்.ஆனால் இதனை திவ்யா மறுக்கவே,அவருக்கு பாதரசம் கொடுத்து குடிக்க சொல்லி மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் சமரசத்தில் வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் நேற்று மனைவி திவ்யாவுக்கு விஷம் கலந்த உப்புமா மற்றும் குளிர்பானத்தை பெல்லார்மின் பாசமாக கொடுத்துள்ளார். அதை வாங்கி சாப்பிட்டு திவ்யா, தனது வீட்டு நாய்க்கும் கொடுத்துள்ளார். இதனையடுத்து உப்புமாவை சாப்பிட்ட பின் திவ்யா, ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக கணவர் பெல்லார்மின் அவரது தந்தை பெர்க்மான்ஸ் தாயார் அமலோற்பம் ஆகியோரை அழைத்துள்ளார். ஆனால் யாரும் வராததால் 108 ஆம்புலன்ஸ்க்கு அழைத்து தனது நிலைமையை விளக்கி கூறியுள்ளார். பின்னர் 108 வந்தவுடன் ஆம்புலன்ஸ்சில் ஏறி தக்கலை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக திவ்யாவின் தந்தை சில்வெஸ்டர் அளித்த புகாரில், பெல்லார்மின் மற்றும் அவரது பெற்றோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் உப்புமாவை சாப்பிட்டு வீட்டில் இறந்துகிடந்த நாய் மற்றும் மீதமிருந்த உணவு பொருட்களையும் கைப்பற்றி சோதனைக்கு அனுப்பியுள்ளனர். சொந்த மனைவியை உப்புமாவில் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தக்கலை டி.எஸ்.பி கூறுகையில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடைபெறும் என்றும் கூறினார்.