புது பெருங்களத்தூரில் பட்டப்பகலில் பெண்ணை கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடியவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் கோபி. கார் ஓட்டுநராக உள்ளார். இவரின் மனைவி யசோதா ராணி(42). இவர் அதேபகுதியில் டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார். இந்த தம்பதியின் இரண்டு பிள்ளைகள் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், யசோதா ராணி நேற்று மதியம் கடையில் துணி தைத்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த நபர் அவருடன் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதையடுத்து ஆத்திரமடைந்த அந்த நபர் அருகில் இருந்த கத்தரிக்கோலால் யசோதா ராணியை கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர், அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
இதை பார்த்த பொதுமக்கள் பீர்க்கன்கரணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த மூன்று ஆண்டுகளாக சேலையூர் கணபதிபுரத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கும் யசோதா ராணிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும் அவருடன் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் தப்பியோடிய செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, தன்னுடனான தொடர்பை துண்டித்து பேசாமல் இருந்ததால் கொலை செய்ததாக போலீசாரிடம் செல்வகுமார் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.