வரதட்சணை கொடுமையால் இளம் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்த சம்பவத்தில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆறு பேரை கைது செய்ய வேண்டி சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் எல்லைக்கு உட்பட்ட சந்தப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் அப்சா (25). கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த தஸ்தகீர் (27) என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணமாகி சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் கணவரை விட்டு பிரிந்த அப்சா, தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2 மாதத்துக்கு முன்புதான் அப்சாவுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது.
பல நாட்களாக மன உளைச்சலில் இருந்த அப்சா திடீரென தாய் வீட்டின் மாடியில் சென்று எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார். விஷயம் அறிந்த அப்சாவின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அப்போது செல்லும் வழியிலேயே அப்சா பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
இதனையடுத்து உயிரிழந்த அப்சாவின் உடலை மீட்ட போலீசார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்த பிறகு சொந்த ஊருக்கு எடுத்துச்செல்ல அனுமதித்திருக்கிறார்கள்.
அப்போது அப்சாவின் சடலத்தை வைத்துக்கொண்டு அவர்கள் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏனெனில், தங்கள் மகளின் உயிரிழப்புக்கு காரணமான கணவர் தஸ்தகீரையும், அவரது தாய் தந்தை உட்பட 7 பேரை வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருக்கோவிலூர் டிஎஸ்பி பழனி தலைமையிலான போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அப்சாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் உடலைப் பெற்றுக்கொண்டு உறவினர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இறந்துப்போன பெண் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, முதற்கட்டமாக முதல் குற்றவாளியாக கருதப்படும் கணவர் தஸ்தகீரை கைது செய்துள்ளனர். மீதமுள்ள 6 பேரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த அப்சாவின் தற்கொலை கடிதத்தில், “என்னுடைய மரணத்திற்கு கணவர், மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்களே காரணம் வரதட்சனை கேட்டு என்னை வாழ விடாமல் கொடுமை செய்தார்கள். குழந்தை பிறந்த பிறகும் ஒரு லட்சம் கொண்டு வந்தால் வீட்டில் சேர்ப்பேன் என்று மிரட்டினார்கள்.
தஸ்தகீரை ஐந்து ஆண்டுகளாக காதலித்தேன். அப்போதே ஐந்து முறை தற்கொலைக்கு முயற்சித்தேன். குழந்தை பிறந்த பிறகும் தற்கொலைக்கு முயற்சித்தேன். இவை அனைத்தையும் தக்க சாட்சிகளோடு வீடியோவாகவும் பதிவிட்டிருக்கிறேன். என் உடலில் இருக்கும் அனைத்து ரத்த காயங்களுக்கும் காரணம் என்னுடைய நாத்தனார்கள்தான். அவர்கள் இருவரும் அடி அடி எனக் கூறியதால் என் கணவர் என்னை தாக்கினார். என் குழந்தையை என்னுடைய பெற்றோரிடம் கொடுத்து விடுங்கள்...” இவ்வாறு அப்சாவின் கடிதம் நீள்கிறது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் இருப்பவர்கள், 104 எண்ணை தொடர்பு கொண்டால், அவர்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்படும்.