தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த தனது காதலன்மீது ஆசிட் தாக்குதல் நடத்தியுள்ளார் திரிபுராவைச் சேர்ந்த பெண்.
திரிபுரா மாநிலம் அகர்தலாவைச் சேர்ந்தவர் 27 வயது பெண் பினாட்டா சாந்தல். இவர் 8 வருடங்களுக்கும் மேலாக தனது பள்ளிப்பருவ நண்பரை காதலித்து வந்திருக்கிறார். பள்ளிப்படிப்பை முடித்தவுடனே இருவரும் புனேவிற்குச் சென்றிருக்கின்றனர். அங்கு சாந்தல் வீட்டுவேலை செய்துவந்திருக்கிறார்.
2018ஆம் ஆண்டு சாந்தலை புனேவிலேயே விட்டுவிட்டு அந்த நபர் மட்டும் திரிபுராவிற்கு திரும்பி வந்திருக்கிறார். அடுத்தடுத்த 3 மாதங்களில் சாந்தலுடனான தொடர்பை முற்றிலும் துண்டித்திருக்கிறார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த நபரின் கிராமத்திற்கு திரும்பிய சாந்தலால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அங்கிருந்து ராஞ்சிக்கு சென்ற அவர் ஒரு சுகாதார பயிற்சி மையத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்.
துர்கா பூஜையின்போது பல்சேரா கிராமத்தில் மீண்டும் தனது காதலனை சந்தித்த சாந்தல், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டிருக்கிறார். ஆனால் அந்த நபர் அதற்கு மறுப்புத் தெரிவிக்கவே சாந்தல் அவர்மீது ஆசிட் தாக்குதல் நடத்தியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது.
ஆசிட் தாக்குதலால் சுவாசப்பாதை, மூக்கு மற்றும் கண்களில் பலத்த காயமடைந்த அந்த நபரை அகர்தாலா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சாந்தலை போலீஸார் விசாரித்தபோது, மற்றொரு பெண்ணுடன் அந்த நபருக்கு தொடர்பு ஏற்பட்டிருந்ததாகவும், அதனால் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததாகவும், அதைத் தாங்கிக்கொள்ள முடியாததால் ஆசிட் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளார்.