திருச்சி திருவானைக்காவல், திம்முராய சமுத்திரம், புதுக்காலனியை சேர்ந்தவர் கங்காதரன். இவர் வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இவரது அண்டை வீட்டில் வசிப்பவர் சுப்புலட்சுமி (52). இருவர் குடும்பத்திற்கும் இடையே வாய்த் தகராறு பிரச்னை ஏற்கனவே இருந்து வந்துள்ள நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு குப்பை எரிப்பதில் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைகளை மனதில் வைத்து பழிவாங்கும் வகையில் கங்காதரன் வளர்த்து வந்த ஆடு, மாடுகளுக்கு சுப்புலட்சுமி தன் வீட்டு வாசலில் குருணை பவுடர் கலந்த அரிசியை வைத்திருக்கிறார்.
ஒன்றும் அறியாத ஐந்தறிவு ஜீவன்கள் பசிக்கு அதனை சாப்பிட்டுள்ளன. குருணை மருந்து கலந்த அரிசியை சாப்பிட்ட ஐந்து நிமிடத்திற்குள் ஒவ்வொரு ஆடுகளாக மொத்தம் 6 ஆடுகள், ஒரு கன்றுக் குட்டி சுருண்டு விழுந்து இறந்துபோனது. ஒரு ஆடு மட்டும் உயிர்பிழைத்தது. சம்பவம் குறித்து கங்காதரன் திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டதில் குருணை மருந்து சாப்பிட்டு ஆடுகள் உயிரிழந்தது தெரியவந்தது.
சுப்புலட்சுமி வீட்டு வாசலில் அரிசியுடன் கலந்து வைத்திருந்த குருணை மருந்தினை கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக பழிவாங்க ஆடு, மாடுகளுக்கு குருணை மருந்தினை வைத்ததை சுப்புலட்சுமி ஒத்துக்கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுப்புலட்சுமியை கைது செய்தனர்.
மருந்தினை கலந்து வைத்து தனது ஆடு, மாடுகளைக் கொன்ற சுப்புலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கங்காதரன் தெரிவித்துள்ளார்.
மனிதர்களுக்கு இடையிலான மனஸ்தாபங்களுக்கு, ஒன்றும் அறியாத ஐந்தறிவு ஜீவன்களை விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.