“எங்கள் மகளை கடத்திவிட்டார்கள்”- கர்நாடகாவில் வீடியோ சர்ச்சையில் சிக்கிய பெண்ணின் பெற்றோர்

“எங்கள் மகளை கடத்திவிட்டார்கள்”- கர்நாடகாவில் வீடியோ சர்ச்சையில் சிக்கிய பெண்ணின் பெற்றோர்
“எங்கள் மகளை கடத்திவிட்டார்கள்”- கர்நாடகாவில் வீடியோ சர்ச்சையில் சிக்கிய பெண்ணின் பெற்றோர்
Published on

கர்நாடக வீடியோ சர்ச்சையில் சிக்கிய பெண் கடத்தப்பட்டுள்ளதாக அந்த பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். 

கர்நாடகாவில் பாஜக அமைச்சரவையின் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ரமேஷ் ஜார்கிஹோலி. 60 வயதான இவர் ஒரு இளம்பெண்ணுக்கு அரசு வேலைவாங்கித் தருவதாகக் கூறி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததது. பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படும் அந்தப் பெண்ணுக்கு அமைச்சர் தரப்பிலிருந்து மிரட்டல் விடுக்கவே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஜார்கிஹோலி பதவி விலகவேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தியதில் அவர் ராஜினாமா செய்தார்.

அதன்பிறகு, அந்த பெண் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டார். இந்த சர்ச்சையின் அடுத்த திருப்பமாக அந்த பெண் பெங்களூருவிலிருந்து கடத்தப்பட்டுள்ளதாக அவருடைய பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

அந்த பெண்ணின் தந்தை கொடுத்துள்ள புகார் பற்றி போலீஸார் கூறுகையில், மார்ச் 2ஆம் தேதியே அந்த பெண் கடத்தப்பட்டுவிட்டதாகவும், அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பது குறித்த எந்த தகவலும் தங்களுக்கு தெரியவில்லை எனவும் கூறியிருக்கிறார். மேலும் அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை எனவும், தன்னைபோல் இருக்கும் வேறொருவர் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த பெண் கூறியதாக அவருடைய தந்தை புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ வெளியானதால் தனது குடும்பத்தின் மரியாதை போய்விட்டதாகவும், மகள் எங்கு இருக்கிறார்? உயிருடன் இருக்கிறாரா? என்பது குறித்துக்கூட தங்களுக்கு எதுவும் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புகாருக்குப்பிறகு அந்த பெண்ணின் பெற்றோர் இரண்டு நிமிட வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில், ‘’எங்கள் மகளிடம் கடைசியாக மார்ச் 2ஆம் தேதிதான் பேசினோம். நேரில் பார்க்கும்போது இதுகுறித்து தெளிவாக விளக்குவதாகக் கூறினார். மேலும் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், அதனால் எங்களை சந்திக்க முடியாது எனவும் கூறினார். எங்கிருந்தாலும், நான் பாதுகாப்பாகத்தான் இருப்பேன் என்றார்’’ என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து காவல் அதிகாரி விக்ரம் ஆப்தே கூறுகையில், பெண்ணை கடத்திய குற்றத்திற்காக இந்திய சட்டப்பிரிவுகள் 363, 368, 343, 346, 354 மற்றும் 506இன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருவதாகவும், காணாமல்போன பெண்ணை தேடிவருவதாகவும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com