உத்தரகாண்ட் மாநிலத்தின் கல்வாலி பகுதியில் உள்ள ராம்பாக் காலனி, ராம்பூர் சாலையில் வசித்து வந்தவர் 32 வயதான தொழிலதிபர் அங்கித் சவுகான்.
கடந்த ஜூலை 15ம் நாள் அன்று டீன்பனி ரயில்வே கிராசிங் அருகில் கார் ஒன்று தனியாக இருப்பதாகவும் அதில் யாரோ ஒருவர் பின் இருக்கையில் இறந்து கிடப்பதாகவும் போலீசுக்கு தகவல் வர, விரைந்து வந்த போலிசார் தனியாக நின்றிருந்த காரை சோதனை செய்தனர்.
போலிசார் சோதனையில் காரில் இறந்து கிடந்தது தொழிலதிபர் அங்கித் சவுகான் என்றும் அவரின் கார் ஏசியிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த கார்பன் மோனோசைடால் அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
ஆனால், அங்கித் சவுகானின் பிரேத பரிசோதனை முடிவில் அவரை பாம்பு கடித்ததால் இறந்தது தெரியவந்துள்ளது. இதை அடுத்து சவுகானின் சகோதரியான இஷா ஹல்த்வானியிடம் போலிசார் நடத்திய விசாரணையில் மஹி ஆர்யாஸ் என்பவரை தனது சகோதரன் காதலித்து வந்ததாகவும் சம்பவம் நடந்த அன்று இருவரும் வெளியில் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மஹி ஆர்யாஸின் போனை போலீசார் ஆய்வு செய்ததில் பாம்பு பிடிப்பவரான ரமேஷ் நாத் என்பவருடன் மஹி ஆர்யாஸ் தொடர்ந்து பேசி வந்தது தெரியவந்தது. மஹி ஆர்யாஸை தொடர்பு கொண்ட போலிசாருக்கு, அவர் தனது புது காதலனுடன் நேபாளுக்கு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பாம்பு பிடிப்பவரான ரமேஷை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், மஹி ஆர்யாஸ், தன்னை அணுகி சவுகானை கொலை செய்வதற்கு உதவி கேட்டதாகவும், அதற்கு முன்பணமாக ரூபாய் 10,000 கொடுத்ததாகவும், கொலையானது ஒரு விபத்துபோல் இருக்கும் படி கேட்டுக்கொண்டதால் பாம்பைக்கொண்டு சவுகானியின் காலை கடிக்கச்செய்து கொலை செய்ததாகவும் ரமேஷ் கூறியுள்ளார்.
இவ்வழக்கில் மஹி ஆர்யாஸ் மற்றும் சம்பந்தபட்டவர்களை கண்டு பிடிக்க போலிசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் முக்கியமான தகவலும் வெளியாகியுள்ளது. தன்னுடைய முந்தைய காதலை பயன்படுத்தி மஹியை மிரட்டி அங்கித் சவுகான் பணம் பெற்று வந்ததாக தெரிகிறது. தொடர்ச்சியாக பணம் கேட்டு மிரட்டி வந்ததால் இந்த முடிவிற்கு மஹி வந்ததாக கூறப்படுகிறது.