பீஹார் மாநிலம் பாட்னாவில், தனது அம்மா வீட்டிற்கு செல்லவேண்டும் என கேட்ட பெண்ணிடம் வறுபுறுத்தி கணவர் வீட்டார் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஐடி கம்பெனியில் மருந்தியல் நிபுணராக பணிபுரிபவர் நாக்பூரைச் சேர்ந்த சோனியா தத்தா. இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு பாட்னாவைச் சேர்ந்த விநாயக் சிங் என்பவரை சந்தித்திருக்கிறார். இரண்டு பேருக்கும் இடையே காதல் ஏற்பட்டதால், கடந்த வருடம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
சோனியா கர்ப்பகால விடுப்பில் இருந்தபோது இருவருக்கும் இடையே சில அரசியல் கருத்துகளில் வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. அதுவே பெரிய சண்டையாக மாறியுள்ளது. குறிப்பிட்ட செய்தி சேனல்களை மட்டுமே பார்த்ததால், சிங்கிற்கு சோனியா மீது கோபம் ஏற்பட்டுள்ளது. பொதுமுடக்கம் அமலுக்கு வரும் முன்பே தனது அம்மா வீட்டிற்குச் செல்லவேண்டும் என சோனியா ஆசைப்பட்டுள்ளார். ஆனால், சிங் தனது வீட்டிற்கு சோனியாவை அனுப்பி வைத்திருக்கிறார். அங்கு இவர்களுக்கு ஆக்ஸ்ட் மாதம் ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை சோனியாவின் சகோதரியும், அவரது கணவரும் அவர்கள் வீட்டிற்கு அழைத்துச்செல்ல வந்திருக்கின்றனர். ஆனால், அங்கு வீட்டிற்குள் அடைத்துவைத்து, விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால் மட்டுமே சகோதரியுடன் செல்ல அனுமதிப்போம் என சிங்கின் குடும்பத்தார் கட்டாயப்படுத்தி இருக்கின்றனர்.
வேறு வழியில்லாமல் கையெழுத்துப் போட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு சோனியா தெரிவித்துள்ளார். மேலும் கையெழுத்து போடும்வரை தனது சகோதரியையும், அவரது கணவரையும் வீட்டைவிட்டு வெளியேசெல்ல அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனால் சோனியா பாட்னா காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து விசாரித்த எஸ்பி உபேந்திர குமார், திருமண முறிவு பற்றி அவர்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார்.
இதுபற்றி சிங், நோய்த்தொற்று காலத்தில், பிறந்த குழந்தையுடன் நாக்பூர்வரை சென்றால் பாதிப்பு ஏற்படலாம் என கவலைப்பட்டதால்தான் அனுமதிக்கவில்லை எனவும், சோனியாவுடன் வாழ்ந்த வாழ்க்கையை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார்.