செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையின் வழக்கு இன்று விசாரிக்கப்படுமா?

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பாக பட்டியலிடப்பட்டுள்ளது. பிரதான வழக்கும், ஜாமீன் கோரிய மனுவும் இன்று விசாரிக்கப்படுமா என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜிமுகநூல்
Published on

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆகஸ்ட் 14ம் தேதி மாற்றப்பட்டது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜிகோப்புப் படம்

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத சுழல் நிலவியது.

இதனையடுத்து எந்த நீதிமன்றம் ஜாமீன் மனுவை விசாரிக்க வேண்டுமென உத்தரவிடக்கோரி செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை எம்பி, எம்எல்ஏ வழக்குகளுக்கான நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு என்று நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ் பாபு அமர்வு அதிருப்தி தெரிவித்தது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட பிரிவு 43 உட்பிரிவு 1ன் கீழ் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் எம்.பி., எம்.எல்.ஏக்களாக இருந்தாலும், அந்த வழக்குகளை விசாரிக்க முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகார வரம்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறி ஆவணங்களை உடனடியாக மாற்ற உத்தரவிட்டனர்.

அதன்படி எம்.பி., எம் எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலிருந்து, முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. அமலாக்கத்துறையின் இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக பட்டியலிடப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரிக்கப்படும் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com