உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலியில் வசித்து வருபவர் கிருஷ்ணபால் லோதி (வயது 40). இவர் கடந்த 2012-இல் பூஜா (32) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். அதுவும் இருவீட்டு தரப்பின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். பூஜா பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இந்த நிலையில் கிருஷ்ணா பால் கடந்த மாதம் ஒரு கொலை முயற்சி வழக்கில் சிக்கினார். பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் சமீபத்தில் தான் ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்.
இந்நிலையில், பூஜா தனது கணவரிடம் முன்பு போல பாசம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனைவியின் நடவடிக்கைகளில் கிருஷ்ணபாலுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனிடையே குடிப்பழக்கத்துக்கு அடிமையான கிருஷ்ணபால் அடிக்கடி குடித்துவிட்டு மனைவி, பிள்ளைகளை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை குடிபோதையில் வீட்டுக்கு வந்த கிருஷ்ணபால், சிறுவயது பிள்ளைகள் முன்னிலையில் மனைவி பூஜாவை சரமாரியாக தாக்கியிருக்கிறார். ஆத்திரத்தில் ஒரு நாட்டுத் துப்பாக்கியை எடுத்து சுட வந்தபோது, பூஜா அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டார். ஆனால் பூஜாவை துரத்திச் சென்ற கிருஷ்ணபால், ஃபதேகஞ்சில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப் பகுதியில் அவரை துப்பாக்கியால் சுட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பூஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை தடுக்க வந்த பூஜாவின் தோழி முன்னா (30) என்பவரும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருக்கிறார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பூஜாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பூஜாவின் தாய் ஷீலா தேவி கொடுத்த புகாரின் பேரில், கொலை நடந்த இடத்தில் கிருஷ்ணபால் அவர் பயன்படுத்திய ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 302 (கொலை) மற்றும் 307 (கொலை முயற்சி) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினர் தெரிவித்த தகவலின்படி, விசாரணையின்போது, கிருஷ்ணபால் தனது மனைவி தன்னை ஏமாற்றியதாக சந்தேகப்பட்டதாகவும், அதனால்தான் மனைவி பூஜாவை சுட்டுக் கொன்றதாகவும் தெரியவந்துள்ளது. "அவள் சாகவேண்டியவள் தான். அதனால்தான் நான் அவளைக் கொன்றேன், எனக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை" என கிருஷ்ணபால் போலீசாரிடம் கூறியிருக்கிறார்.
முன்னதாக, கிருஷ்ணபாலை அவரது மனைவி தான் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே எடுத்து வந்தார். ஜாமீனில் வெளியே கொண்டு வந்த மனைவியையே அவர் கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.