மதுரையில் மாமியாரிடம் சமரசம் பேசுவதாக நினைத்துச்சென்ற கணவரை மனைவியின் தகாத காதலன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் ஆணைக்குழாயைச் சேர்ந்த மணிகண்டன் (28). இவருக்கும் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ஜோதி லட்சுமிக்கும் (21) இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இருவரும் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து அதே பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஜோதி லட்சுமியின் பெற்றோர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கினர். இதில் ஜோதிலட்சுமியின் தந்தை சிவகுமார் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் பெற்றோருக்கு உதவியாக ஜோதி லட்சுமி தனது மகளுடன் காந்தி நகருக்கு வந்து விட்டார். அத்துடன் மருத்துவமனைக்கு சென்று தனது பெற்றோரை கவனித்து வந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, கப்பலூர் சுங்கச்சாவடியைச் சேர்ந்த கார்த்திக் (24) என்பவர் இருந்துள்ளார். அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில், ஜோதிலட்சுமியுடன் கார்த்திக் நட்பாக பழகியுள்ளார். நாளடைவில் அந்த நட்பு ஒரு ஈர்ப்பாக மாற இருவரும் அடிக்கடி வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர்.
இதையடுத்து ஜோதிலட்சுமியின் பெற்றோர்கள் சிகிச்சை முடித்து வீட்டுக்கு வந்த பின்னர், ஜோதி லட்சுமி கணவரது வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு சென்ற பின்னரும் ஜோதி லட்சுமி கார்த்தியை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். இந்த விவகாரம் அவரது கணவர் மணிகண்டனுக்கு தெரியவர, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணவனுடன் சண்டையிட்டுக் கைக்குழந்தையுடன் ஜோதி லட்சுமி பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் திங்கட்கிழமை காலை கார்த்திக் மற்றும் நண்பர் ஒருவருடன் விருதுநகரிலுள்ள கணவரின் வீட்டிற்கு ஜோதி லட்சுமி சென்றிருக்கிறார். அங்கே வீட்டிலிருந்த தனது கணவரிடம், தனது தாய் சமாதானம் செய்து வைக்க அழைத்து வரச் சொன்னதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இந்தத் தகவலை மணிகண்டன் தனது பெற்றோரிடம் தெரிவித்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். காலை 10 மணிக்கு மணிகண்டன் தனது தாயார் காளீஸ்வரிக்கு போன் செய்து ‘அம்மா அம்மா’ என்று இரண்டு முறை அழைத்திருக்கிறார். அப்போது திடீரென போன் துண்டிக்கப்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் மணிகண்டனின் பெற்றோருக்கு போன் செய்த ஜோதி லட்சுமியின் தாயார், மணிகண்டனை கார்த்திக் கொலை செய்து விட்டதாகவும், அது குறித்து விசாரிக்குமாறும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டனின் பெற்றோர், திருமங்கலம் அருகே உள்ள ஆஸ்டின்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ஜோதி லட்சுமி வீட்டின் அருகேயுள்ள மறைவிடத்தில் கத்தியால் குத்தப்பட்டு பிணமாக கிடந்த மணிகண்டனை மீட்டுள்ளனர். பின்னர் அவரது உடலை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கார்த்திக் உள்ளிட்ட சிலர் மணிகண்டனை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர். மணிகண்டன் கொலைக்கு ஜோதி லட்சுமி மட்டுமின்றி, அவருடைய தாயார் சித்ராதேவி மற்றும் தந்தை சிவக்குமார் ஆகியோரும் உடந்தையாக இருந்திருக்கலாம் என மணிகண்டனின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், ஜோதி லட்சுமி மற்றும் அவரது பெற்றோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.