"இன்னும் பல வருஷங்கள் வாழனும்னு ஆசை"- `பிகினி கில்லர்' சோப்ராஜின் ரீசண்ட் அதிர்ச்சி பேட்டி

"இன்னும் பல வருஷங்கள் வாழனும்னு ஆசை"- `பிகினி கில்லர்' சோப்ராஜின் ரீசண்ட் அதிர்ச்சி பேட்டி
"இன்னும் பல வருஷங்கள் வாழனும்னு ஆசை"- `பிகினி கில்லர்' சோப்ராஜின் ரீசண்ட் அதிர்ச்சி பேட்டி
Published on

சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் ஒரு புகைப்படம் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியது. படத்தில் முதியவரொருவர் இருந்தார். அவர் பக்கத்தில் சில பெண்கள். அந்த முதியவரைப் பார்த்து, அருகிலிருந்த பெண்களின் முகத்தில் அவ்வளவு அதிர்ச்சி! ஏன் இந்த அதிர்ச்சி? படத்தில் இருப்பவர் யார்? எதற்காக அந்த பெண்கள் பயத்தோடு அருகில் அமர்ந்து இருக்கிறார்கள்? இப்படி நிறைய கேள்விகள் பலருக்கும் இருந்திருக்கும். இவருக்கும் இந்தியாவிற்கும் ஒரு பெரிய தொடர்பு உண்டு. கேட்டாலே நடுங்க வைக்கும் ஒரு சீரியல் கில்லரான அவர் பற்றிய அதிர்ச்சி தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

எங்கிருந்து தொடங்கியது? 

அந்நபரின் பெயர் சார்லஸ் சோப்ராஜ். வயது 78. "பிகினி கில்லர்" என்று சொன்னால் பலருக்கும் தெரியக்கூடும். இவருடைய தாய் தந்தை, இந்தியா - கைகோன் ஆகிய இருவேறு பகுதிகளை சேர்ந்தவர்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் 1944-ல் குழந்தை பெற்றெடுத்த நிலையில், இவருடைய தந்தை அவரை தனது மகன் என்று ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் அவருடைய தாய், ஒரு பிரெஞ்சு ராணுவ வீரரைத் திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து இவரும் பிரான்ஸ் சென்றார். இதுவே அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்ததாக சொல்லப்படுகிறது. பிரான்ஸ் சென்ற அவர், தன்னுடைய சொந்த தேவைக்காக மோசடியில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கத் தொடங்கினார். அதன்மூலம் அவர் சொகுசு வாழ்க்கை வாழவும் துவங்கினார்.

தொடர் கொலைகளின் தொடக்கம்: 

இருப்பினும் தனது தந்தையால் கைவிடப்பட்டதால் வெறுப்பாகவும், தனது தாயின் புதிய குடும்பத்தில் ஒருபோதும் அவர் இருக்கவில்லை என்றும் மேற்கத்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முதலில் சிறு குற்றங்கள் செய்யத் தொடங்கிய அவர், தனது பதின்ம வயதிலே சிறைக்குச் சென்றுவருவதைப் பழக்கமாக்கிக் கொள்ளும் அளவுக்கு இருந்திருக்கிறார்.

சிறைக்கு செல்வதை வாடிக்கையாகவே கொண்ட சோப்ராஜ், தான் அடுத்து சிறைக்கு செல்வதற்கு உள்ள காலகட்டத்தில், உலகம் முழுவதும் பயணித்திருக்கிறார். அப்படி அவர் பயணம் செய்தபோது, "ஹிப்பி" பயணிகளை டார்கெட் செய்ய தொடங்கியிருக்கிறார். ஹிப்பி என்றால், சிறுவயதிலேயே நீளமாக முடி வளர்த்துக்கொண்டு, போதைப் பொருட்கள் பயன்படுத்தி, மாறுபட்ட வாழ்க்கை வாழ்ந்து தங்கள் வாழ்க்கையை அனுபவிப்பவர்கள். ஆசியா வழியாகச் செல்லும் மேற்கத்தியச் சுற்றுலாப் பயணிகளாக இருக்கும் இப்படியானவர்களுடன் பழகி, அவர்களை கொலை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார் சோப்ராஜ்.

அதிலும் பெரும்பாலும் பெண்கள்தான் அவரின் இலக்காக இருந்துள்ளனர். அவர்களிடம் அன்பாக பேசுவது போல நடித்து, ஸ்பைக் (கூர்மையான ஆயுதம) மூலம் அவர்களைக் கொலை செய்வார். இவரின் மோசடி வலையில் வீழ்ந்து, சுமார் 20 பேர் கொலைசெய்யப்பட்டுள்ளனர். இன்னும்கூட பலர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. குறிப்பாக இந்தியா, தாய்லாந்து, வியட்நாம், நேபாளம் உட்படப் பல நாடுகளில் 30க்கும் அதிகமான கொலைகளைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது வரை 12 கொலைகள் மட்டுமே சாட்சியங்களுடன் நிரூபணமாகி உள்ளன. ஏன் இவ்வளவு பேரை சோப்ராஜ் கொலை செய்தார் என்பதற்கு அவரிடம் எந்தக்காரணமும் இல்லை. சைகோ போல, ரேண்டமாக பெண்களை தேர்ந்தெடுத்து கொலை செய்து வந்திருக்கிறார்.

பிகினி கில்லர்:

சில சமயங்களில் பாஸ்போர்ட்டுகளை திருடி, தான் கொன்ற நபர்களின் அடையாளங்களைப் பயன்படுத்தியிருக்கிறார் சோப்ராஜ். அவருடன் உரையாடிய பத்திரிகையாளர்கள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள், சோப்ராஜ் சாதுவான மற்றும் வசீகரமானவர் என்றெல்லாம் சொல்கின்றனர். பலநேரங்களில் அவர் குற்றங்களைச் செய்வதற்கும், கூட்டாளிகளைச் சேர்ப்பதற்கும், தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கும் உதவியது அவரின் வசீகரமான பேச்சுதான் என்கின்றனர். அவரின் பேச்சில் மயங்கி, பிரான்ஸ் சிறைச்சாலை ஊழியர் ஒருவர், சோப்ராஜை திருமணமே செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அவர்கள் இருவரும் குடியேறி, ஒரு பெண் குழந்தையும் பெற்றெடுத்தனர். ஆனாலும் சோப்ராஜ் திருந்தவில்லை. தொடர்ந்து கைது செய்யப்பட்டு செய்யப்பட்டு, விடுதலையாகிக்கொண்டிருந்தார். இப்படி அவர் பல நாடுகளில் பலமுறை கைது செய்யப்பட்டிருக்கிறாராம். ஆனால் எல்லா இடங்கிளிலும் தப்பித்து ஓடியுள்ளார் அல்லது லஞ்சம் கொடுத்தார் என்று கூறியிருக்கின்றனர். இப்படி நிறைய முறை சிறையிலிருந்தும் போலீஸிடமிருந்தும் தப்பித்ததால் இவரை "சர்பண்ட்” அதாவது பாம்பு என்றும் சொல்வார்கள்.

இந்த சோப்ராஜின் கொலை வலையில் சிக்கியோரில், முதன்முதலாக இருந்ததாக சொல்லப்படுபவர் ஒரு பெண். அவர் தாய்லாந்தில் பிகினி உடையிலிருந்தபோது கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதன்பின் அவர் கொலைசெய்த பெண்களில் பாதிப்பேர் பிகினி அணிந்திருந்தவர்கள் தான். பெரும்பாலான நேரங்களில் இவரிடம் சிக்கும் பல பெண்களையும், பிகினி உடையில் வரச்சொல்லி இவர் கொலை செய்வார் என்றும் சொல்லப்படுகிறது. அதனாலேயே இவரை பிகினி கில்லர் என்கின்றனர்.

1976 இல் இந்தியாவில் கைது:

இவர் கைதாகி பல ஆண்டுகள் தொடர்ச்சியாக சிறையிலிருந்த காலமென்பது, இந்தியாவில்தான் நிகழ்ந்தது. சரியாக ஜூலை 1976 இல் புது டெல்லியில், சோப்ராஜ் மற்றும் மூன்று பெண் கூட்டாளிகள், சில பிரெஞ்சு மாணவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக  இருந்திருக்கின்றனர். அங்கு அவர்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு விஷ மாத்திரைகளைக் கொடுத்திருக்கின்றனர். இருப்பினும், சில மாணவர்கள் அதிலிருந்து தப்பித்து காவல்துறையை அழைத்துள்ளனர். இதனையடுத்து சோப்ராஜ் மற்றும் அவரது குழு கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அப்போது திகார் சிறையில் துணைக் கண்காணிப்பாளராக இருந்த ஜே.பி. நைதானி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இப்படியாக எழுதினார்… “சிறைக்குள் பல்வேறு வாழ்க்கை முறைகளில் அவரைப் பார்த்திருக்கிறேன்: உள்ளூர் நீதிமன்றங்களில் அவர் சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவது, பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களைக் கையாள்வது மற்றும் அவரது புத்தக வாசிப்பு என்றெல்லாம் பார்த்திருக்கிறேன். எப்போதும் அவரது பார்வை, பெண்களை வசீகரிக்கும். வெளிநாட்டிலிருப்பவர்கள், உள்ளூர்வாசிகள் என பலரும்… இதில் அடங்குவர். அவர்களில் சிலர் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினர். அதற்காக அவரை வெளியே விடுவிக்குமாறு அனுமதி கோரி நீதிமன்றங்களில்கூட விண்ணப்பித்துள்ளனர். அவருடைய ஆளுமை அப்படிப்பட்டது!

சிறையில் இருக்கும் காலகட்டத்தில் காவலாளர்களிடம் தன்னை நல்லமுறையில் பழக்கப்படுத்திக்கொண்டுள்ளார் சோப்ராஜ். இப்படியான அவரின் தண்டனைக் காலம் முடியும் தருவாயில், தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது சோப்ராஜ் சிறைக்காவலர்களுக்கு ஸ்பைக் கலந்த இனிப்புகளைக் கொடுத்துவிட்டுத் தப்பியதாக சொல்லப்படுகிறது. தப்பித்த அவர், மீண்டும் பிடிபட்டிருக்கிறார். இப்போது தப்பித்ததற்கும் சேர்த்து தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அப்போது சர்வதேச கட்டுரையொன்று "அவரது 10 ஆண்டு சிறைத்தண்டனையின் முடிவில் இருந்தார்.

அப்படியான சூழலில், அவர் மீண்டும் பிடிபடுவதற்காக வேண்டி, தப்பித்ததற்காக புதிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நினைத்தார். அதனால் வேண்டுமென்றே தப்பித்தார். அன்று அவர் ஒருவேளை இந்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தால், தாய்லாந்திற்கு நாடு கடத்தப்பட்டிருக்கலாம். அங்கு அவர் ஐந்து கொலைகளுக்காகத் தேடப்பட்டு வந்தார். அப்படியான இடத்தில் அவர் பிடிபட்டால், அவருக்கு மரண தண்டனை வழங்கப்படும்.

அன்று அவர் இந்தியாவில் மீண்டும் பிடிப்பட்டதால் அடுத்த குற்றத்துக்காக சிறை தண்டனை அனுபவ்வித்து 1997 இல் அவர் மீண்டும் விடுவிக்கப்பட்டார். அந்த நேரத்தில், அவர் பாங்காக்கில் விசாரணை செய்யப்படுவதற்கான 20 ஆண்டு காலக்கெடு காலாவதியாகிவிட்டது. இப்படி அந்த தண்டனையிலிருந்து விடுபட இங்கிருந்து தப்பித்தார்" என்று கூறியுள்ளது.

நேபாளத்தில் கைது: 

சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு யோசித்து ஸ்கெட்ச் போட்டு செயல்படும் இந்த சார்லஸ் சோப்ராஜ், இந்தியாவிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, மீண்டும் பிரான்ஸ் சென்றார். பின் 2003 இல், அவர் நேபாளத்திற்குச் சென்றார். அங்கு அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். 2004 ஆம் ஆண்டில், 1975 ஆம் ஆண்டில் அமெரிக்கப் பெண்ணான கோனி ஜோ ப்ரோன்சிச்சைக் கொன்றதற்காக நேபாளத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், ப்ரோன்சிச்சின் அமெரிக்க நண்பரான லாரன்ட் கேரியரைக் கொன்றதற்காக அவர் தண்டிக்கப்பட்டார்.

இந்நிலையில் 2014 ஆம் ஆண்டில், திஹார் சிறையில் ஜெய்ஷ் இஎம் தலைவர் மசூத் அசாருடன் நட்பாகப் பழகிய பிறகு, தலிபான் ஆயுத வியாபாரியாக அவர் பணிபுரிந்ததாகவும், அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்புடன் (சிஐஏ) தொடர்பு கொண்டிருந்ததாகவும் கூறிக்கொண்டிருந்தார். இப்படியான சூழலில்தான் நேபாளத்தில், இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5 இல் பங்கேற்ற நிஹிதா பிஸ்வாஸ் என்ற பெண்ணை அவர் மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நிஹிதாவுக்கு அப்போது வயது 21 தான். சோப்ராஜூக்கோ, வயது 64. ஜெயிலில் இருந்த சோப்ராஜூக்கு சிறையில் மொழிப்பெயர்ப்பாளராக சென்ற நிஹிதா, அங்கு அவரை கண்ட பின் `இவர் நல்லவரென எனக்கு தோன்றுகிறது. தவறுதலாக இவரை கைதுசெய்துவிட்டனர்’ என்று ஊடகங்களில் பேசியிருந்தார்! பின் திருமணமும் செய்துகொண்டார்.

அதன்பின் நேபாளத்தில் மதுபான விடுதியொன்றில் நடந்த சிறு தகராறில் பிடிபட்டார் சோப்ராஜ். அவரை சாதாரண அடிதடி வழக்கில் கைது செய்த காவல்துறைக்கு, பின்னர்தான் அவரின் வாழ்க்கையே தெரியவந்துள்ளது. அவருடைய போலி பாஸ்போர்ட்டில் தொடங்கி, அவரது கடந்த கால குற்றங்களை அறிந்த நேபாள் காவல்துறை, நேபாளத்திலேயே இரு பெண்களை அவர் எரித்துக்கொன்றதை கண்டுபிடித்துள்ளது. இதற்காக நேபாளத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது அவருக்கு!

உலகை அதிர வைத்த கொலையாளியின் விடுதலை:

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக நேபாள உச்ச நீதிமன்றம் சோப்ராஜை கடந்த  வாரம் புதன்கிழமை விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. நேபாள நீதிமன்றம் சோப்ராஜை 15 நாட்களுக்குள் விடுவிக்கவும், உடனடியாக அவரது சொந்த நாடான பிரான்சுக்கு நாடு கடத்தவும் உத்தரவிட்டது. 78 வயதான சோப்ராஜ், அப்படி நாடுகடத்தப்பட்ட போதுதான் விமானத்தில் பயணித்திருக்கிறார். அங்குதான் அவர் பக்கத்தில் அமர்ந்த பெண்கள், அந்த ஷாக் ரியாக்‌ஷனை கொடுத்துள்ளனர்.

சோப்ராஜின் வாழ்க்கையை மையப்படுத்தி `The Serpent' என்றொரு திரைப்படமே வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல அதிர்ச்சிகளை கொடுக்கும் இந்த நிஜ ராட்சசன், தனது சமீபத்திய பேட்டியொன்றில், “நான் நேராக பிரான்ஸ் செல்ல இருக்கிறேன். அங்கு என் குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன். இன்னும் பல ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை. விடுதலையான பின் நான் நன்றாக உணர்கிறேன்... நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. நான் நிறைய பேர் மீது வழக்கு தொடர வேண்டும். நேபாள மாநிலம் உட்பட! நான் சீரியல் கில்லர் என்று பொய்யாக குற்றம்சாட்டிவிட்டனர்” என்று பேசியிருக்கிறார். அடுத்து சோப்ராஜ்ஜின் வலையில் எந்தப் பெண்ணும் சிக்காமல் இருக்க வேண்டும்! அதுவே இப்போது எல்லோரின் எண்ணமும்...

அருணா ஆறுச்சாமி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com