சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள வனப்பகுதியில் வனத் துறையினரின் உதவியுடன் வெள்ளைக்கல் வெட்டி கடத்தப்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிகாரிகள், ஊழியர்கள் துணையுடன் காப்பு காட்டில் சுமார் 50 ஏக்கரில் வெள்ளைக்கல் வெட்டி கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள தேக்கம்பட்டி கிராமம் செங்கரடு பகுதியில் டேன்மேக் வெள்ளைக்கல் வெட்டி எடுக்கும் குவாரி உள்ளது. மேலும், இதனை ஒட்டியுள்ள சேர்வராயன் தெற்கு வனசரகத்திற்கு உட்பட்ட குரும்பப்பட்டி காப்புக் காட்டை ஒட்டிய பகுதியில் வெள்ளைக்கல் சுரங்கம் உள்ளது. இதனை சிலர் வெட்டி கடத்திச்செல்வதாக புகார் எழுந்தது. இதுபோக காப்பு காட்டில் பல்வேறு இடங்களில் வெள்ளைக்கல் பாறைகள் ஆங்காங்கே உள்ளன. இந்த வெள்ளை கல்லை, மர்ம நபர்கள் வெட்டி கடத்தி செல்வதாக புகார்கள் கூறப்படுகிறது.
இதையடுத்து, நிகழ்விடத்திற்கு சென்ற சென்னை வனத்துறை விஜிலன்ஸ் அதிகாரிகள், தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்து எப்படி வெள்ளைக்கல்லை கடத்த முடியும் என வனத்துறை அதிகாரிகளிடமும், ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். குரும்பப்பட்டி காப்பு காட்டில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு இடங்களில் வெள்ளைக்கல் வெட்டி கடத்தப்பட்டுள்ளது, அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், கடத்தலுக்கு வனத்துறை ஊழியர்கள் உடந்தையாக இருப்பது தெரியவந்துள்ளதால் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் காப்புக்காடு பகுதியில் தீவிர ஆய்வு நடத்தி எத்தனை டன் அளவிற்கு வெள்ளைக்கல் கடத்தப்பட்டு இருக்கும் என்று கணக்கு எடுத்துள்ளனர்.