விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள இசலி பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் சுள்ளங்குடி பகுதியைச் சேர்ந்த சங்கிலி என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல நேற்றிரவு டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு ரூ.1 லட்சத்து 3000 ரூபாய் பணத்தை சங்கிலி வீட்டிற்கு எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது சங்கிலி, இசலி - நரிக்குடி செல்லும் சாலையில் இருவர்குளம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சங்கிலியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவரிடமிருந்த ரூ.1 லட்சத்து 3000 பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சங்கிலி இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து செல்போன் மூலம் நரிக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து திருச்சுழி டிஎஸ்பி ஜெகநாதன் உத்தரவின் பேரில் நரிக்குடி இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், திருச்சுழி இன்ஸ்பெக்டர் மணிகண்டன், திருச்சுழி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமாராணி ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த சிவசக்தி, இசலி பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாணிக்கனேந்தல் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் (என்ற) சதீஷ் ஆகிய நால்வரையும் நரிக்குடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.