கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த போலி மருத்துவர் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டு மீண்டும் கைதாகி உள்ளார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியையடுத்த ஆவட்டி கிராமத்தில் சுரேஷ் என்பவர் மருந்தகம் நடத்தி வந்திருக்கிறார். இவர் மருத்துவம் படிக்காமல் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக, கடந்த 17.11.22 அன்று திட்டக்குடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அளித்த புகாரின் பேரில் ராமநத்தம் காவல் துறையினர் அவரை கைது செய்தனர். இந்த நிலையில் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட அவர், காவல் நிலையம் வந்து 25 நாட்கள் நாள்தோறும் கையெழுத்து இட்டு செல்லும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் 15.12.22 அன்று சட்டவிரோதமாக ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவரும், அவரது மனைவி கஸ்தூரியும், தனக்கு ஏற்கெனவே 13 - 11 வயதில் குழந்தைகள் இருப்பதாக கூறி, தனது நான்கு மாத கருவை கலைக்க சுரேஷை அணுகி உள்ளனர். சுரேஷூம் 2,000 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு கருக்கலைப்பு மாத்திரைகளை கஸ்தூரியிடம் வழங்கியுள்ளார்.
கஸ்தூரி, கருக்கலைப்பு மாத்திரையை உண்ட பின்பு இரண்டு நாட்கள் கடும் ரத்தம் போக்கு காரணமாக கவலைக்கிடமான முறையில் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல் கருக்கலைப்பு செய்ய முற்பட்டதால் கஸ்தூரியின் உடல்நிலை மோசமானது. இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் துறையிடம் மருத்துவமனையின் சார்பில் அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் போலி மருத்துவர் சுரேஷ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராமப்புற மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமல் மருந்தகங்களில் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து வாங்கி உண்ணுவதால் இது போன்று சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது என்று மருத்துவ செயற்பாட்டாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
மாவட்ட காவல்துறையும் சுகாதாரத்துறையும் தொடர்ச்சியாக போலி மருத்துவர்களை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.