உசிலம்பட்டி அருகே பெண்சிசு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் உடலை தோண்டி எடுத்து அதை உடற்கூராய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரியகட்டளை கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி - கௌசல்யா தம்பதிக்கு ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 21-ஆம் தேதி மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தை பிறந்திருந்தது. கடந்த 26-ஆம் தேதி அக்குழந்தை உயிரிழந்ததாகக் கூறிய பெற்றோர், வீட்டின் அருகிலேயே அக்குழந்தையை புதைத்துள்ளனர் எனத் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து விஏஓ முனியாண்டி சேடபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முத்துப்பாண்டி - கௌசல்யா வீட்டிற்கு விசாரணைக்காக சென்றபோது பெற்றோர்கள் தலைமறைவானது தெரிய வந்துள்ளது.
பெற்றோர்கள் தலைமறைவானதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்ந்து மர்மம் தொடர்ந்தது. இந்நிலையில் இன்று வட்டாச்சியர் ரவிச்சந்திரன், விஏஓ முணியாண்டி, மதுரை மாவட்ட காவல் கூடுதல் காவல் துணைக் காணிப்பாளர் சந்திரமௌலி தலைமையிலான காவல்துறையினர், சமூக நலத்துறையின் சமூக நல விரிவாக்க அலுவலர் ஜெயா தலைமையிலான அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர் நடராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று, அங்கு பெண் சிசு புதைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்தில் தோண்டி சிசுவின் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து அதை அவர்கள் உடற்கூராய்வும் செய்தனர்.
இந்த உடற்கூறு ஆய்வு முடிவுகள் மருத்துவ குழுவினர் அறிக்கையாக தாக்கல் செய்த பின்பு உண்மை தெரியவரும் எனக் கூறப்படுகிறது.