மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 20 குடிமைப்பணிகளுக்கான 1011 இடங்களுக்கான முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி முதல் பிப்ரவரி 22-ம் தேதி வரை இதற்கான விண்ணப்ப பதிவு நடைபெற்ற நிலையில் இன்று காலை மதியம் என இரு வேளைகளில் தேர்வு நடைபெறுகிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் நாடு முழுவதும் 77 நகரங்களில் காலை 09:30 - 11:30 மற்றும் 02:30 - 04:30 என இரு வேளைகளாக தேர்வு நடைபெறுகிறது.
இந்தத் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டிற்கான தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் கருப்பு பால்பாயிண்ட் பேனாவை மட்டுமே ஓஎம்ஆர் தாளில் பயன்படுத்தவேண்டும். சாதாரண கைக்கடிகாரங்களைப் பயன்படுத்தலாம். ஃமொபைல் போன்கள், பென்டிரைவ், ஸ்மார்ட் வாட்ச், புளூ டூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
`தேர்வில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும்; முகக்கவசம் அணியாதவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்; தங்களுக்கான கிருமிநாசினி திரவத்தை தெளிவான பாட்டில்களில் கொண்டு வரவேண்டும்' என்று அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அசு நடத்தும் தேர்வு என்பதால் தேர்வர்களுக்கான அறிவுறுத்தல்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்தன.
இந்தியா முழுவதிலுமிருந்து 25 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இந்த தேர்வை இன்று எழுதுகின்றனர். இதில் சென்னையில் 68 மையங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் தேர்வு எழுதுகின்றனர்.