போதையில் சப்பாத்தி கேட்டதில் ஏற்பட்ட தகராறு நிமித்தம் லாரி ஏற்றி இருவரை கொலைசெய்த உ.பி. லாரி ஓட்டுநர், கிளீனரை போலீசார் கைது செய்தனர். ஆத்திரத்தில் லாரி கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய உறவினர்களால் பதற்றம் நிலவியது.
சென்னையை அடுத்த செங்குன்றத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம், மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் சொந்தமாக லாரி பார்க்கிங் யார்டு நடத்தி வருகிறார். நேற்றிரவு வடபெரும்பாக்கம் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கமலகண்ணன், நவீன் மற்றும் வடகரை பகுதியைச் சேர்ந்த குமரன் ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் லாரி பார்க்கிங் உள்ளே சென்றுள்ளனர்.
பின்னர் அங்கு நின்றிருந்த வடமாநில லாரி ஒன்றின் பின்புறம் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மூவரும் லாரி பின்னால் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் மதுபோதையில் லாரி ஓட்டுநரிடம் சப்பாத்தி கேட்டு தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் லாரி ஓட்டுநருக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியிருக்கிறது.
இதில் ஆத்திரமடைந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் கண்ணையா லால்சிங் திடீரென லாரியை பின்னோக்கி இயக்கி லாரியின் பின்புறம் அமர்ந்திருந்த 3 பேர் மீது லாரியை ஏற்றி இறக்கினார். இதில் 3 பேரும் லாரி சக்கரத்தில் சிக்கி நசுங்கினர். மேலும் இவர்களது இருசக்கர வாகனமும் நசுங்கியது. இச்சம்பவத்தில் கமலக்கண்ணன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த நவீன், குமரன் இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனே ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே குமரன் உயிரிழந்தார். நவீன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவர் லாரி ஏற்றி கொலை செய்யபட்ட சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் பொதுமக்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் திரண்டு வந்து லாரி பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருந்த 5க்கும் மேற்பட்ட லாரி கண்ணாடிகளை கற்கள் வீசி அடித்து உடைத்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவடி துணை கமிஷனர் மகேஷ் தலைமையில், செங்குன்றம் உதவி ஆணையர் முருகேசன், மணலி உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, ஆய்வாளர்கள் ரமேஷ், கொடிராஜ் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை அப்புறப்படுத்தி கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் அப்பகுதியில் நள்ளிரவு வரை பதற்றம் நிலவியது. இந்த கொலை சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கண்ணையா லால் சிங், கிளீனர் கிரீஷ்குமார் ஆகிய இருவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.