உத்தரபிரதேசம் பதாவுன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நத்து லால் ஜதாவ் (56). பட்டியலினத்தைச் சேர்ந்த இவருக்கு ஷேக்பூர் கிராமத்தில் விவசாய நிலம் இருக்கிறது. இவர் வயலுக்கு நீர்ப்பாசனம் செய்ய குழாய் முறையை பயன்படுத்தி இருக்கிறார்.
அதேப்பகுதியைச் சேர்ந்தவர் ரூப் கிஷோர். அவரும் தனது வயலுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஜதாவிடம் தண்ணீர் கேட்டிருக்கிறார். ஆனால் ஜதாவ் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிஷோர், அவரை மோசமான வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்திருக்கிறார். மேலும் அங்கிருந்த குச்சியால் அவரை பலமாக அடித்திருக்கிறார். இதை அருகிலிருந்தவர்கள் தடுக்க வந்திருக்கின்றனர்.
ஆனால், மேலும் ஆத்திரமடைந்த கிஷோர், அங்கிருந்த மண்வெட்டியால் ஜதாவை தலையில் வெட்டியிருக்கிறார். இதனால், தலை துண்டாகி தரையில் விழுந்திருக்கிறது. இதைப்பார்த்து பயந்ததால், காப்பாற்ற வந்த மக்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு ஜதாவின் மகன் ஓம்பால் கொடுத்த பேட்டியில், அவர் தனது தந்தையுடன்தான் வயலில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், உணவு சாப்பிட வீட்டுக்குச் சென்ற நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும் சம்பவத்தை நேரில் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் நள்ளிரவில் தன்னிடம் இதுபற்றி தெரிவித்ததாகவும் கூறியிருக்கிறார்.