விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகளில் புகுந்து நகைகளை கொள்ளையடித்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள நொளம்பூர் கிராமத்தில் வசிப்பவர் மணிவண்ணன். இவரது வீட்டில் நகைகளை திருடிக் கொண்டு வெளியே வந்த பெண் ஒருவரை, பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்தப் பெண்ணை போலீசார் விசாரணை செய்ததில் அவர் பெயர் கல்பனா (36) என்பதும், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
மேலும் விசாரித்ததில் அவருடன் சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த லட்சுமி (50) மற்றும் இருவர் சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் வீடுதோறும் சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பதாகவும், கடன் தருவதாகவும் கூறி நோட்டமிட்டுள்ளனர். பின்னர் ஆளில்லா வீடுகளை கண்டறிந்து கொள்ளையடித்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில், மற்றொரு பெண்ணான லட்சுமியையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் திண்டிவனம், மயிலம், பிரம்மதேசம் ஆகிய பகுதிகளில் திருடியதை ஒப்புக் கொண்டனர். இவர்கள் மீது ஏற்கெனவே காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பல திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் 35 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.