செய்தியாளர்: சே.விவேகானந்தன்
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டி பகுதியில், முறையான மருத்துவம் படிக்காமல், பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மொரப்பூர் காவல் துறையினர் ஆர்.கோபிநாதம்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மாரண்டஹள்ளி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன், ராஜ்குமார் இருவரும் அந்த பகுதியில் உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது முறையான மருத்துவம் படிக்காமல், பி.ஃபார்ம் படித்துவிட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலி மருத்துவர்கள் ராமச்சந்திரன், ராஜ்குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்த மருத்துவ உபகரண பொருட்களை பறிமுதல் செய்தனர்.