மதுரை தனியார் காப்பகத்தில் குழந்தைகள் விற்பனை - 2 இடைத்தரகர்கள் கைது

மதுரை தனியார் காப்பகத்தில் குழந்தைகள் விற்பனை - 2 இடைத்தரகர்கள் கைது
மதுரை தனியார் காப்பகத்தில் குழந்தைகள் விற்பனை - 2 இடைத்தரகர்கள் கைது
Published on

மதுரை தனியார் காப்பகத்தில் 2 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் 2 இடைத்தரகர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இதயம் அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வந்த காப்பகத்தில் 2 குழந்தைகள் சட்டத்திற்கு புறம்பாக ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே நகைக்கடை உரிமையாளர், சில்வர் பட்டறை தொழிலாளி, குழைந்தைகளை விற்பனைக்கு வாங்கிய தம்பதி, காப்பக நிர்வாகி என 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த குழந்தை விற்பனைக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட இடைத்தரகர்களான செல்வி, ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். செல்வி என்ற இடைத்தரகர், ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பில் தன்னார்வலராக இருக்கிறேன் எனக்கூறி வலம் வந்ததாகவும், ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் குழந்தையில்லா தம்பதிகளை அவர் மூளை சலவை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், குழந்தைகளை விற்பனை செய்ய கமிஷனாக ரூ.20 ஆயிரம் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இதுவரை இந்த விவகாரத்தில் போலீசார் 7 பேரை கைது செய்துள்ளனர். இதனிடையே காப்பகத்தின் உரிமையாளர்கள் இரண்டு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இன்று இரவுக்குள் அவர்களையும் போலீசார் கைது செய்துவிடுவர் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, இதயம் அறக்கட்டளையில் வளர்க்கப்பட்டு வந்த ஒரு வயது ஆண் குழந்தை கொரோனாவில் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இவ்விவகாரத்தில் தலையிட்ட தல்லாகுளம் காவல்துறையினர், காப்பக நிர்வாகிகளான கனிமொழி மற்றும் கலைவாணி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது கொரோனா பாதித்த குழந்தை கடந்த 29ஆம் தேதி உயிரிழந்துவிட்டதாகவும், அதனை தத்தநேரி மயானத்தில் அடக்கம் செய்ததாகக்கூறி அதற்கான ரசீதையும் அவர்கள் காண்பித்துள்ளனர். ஆனால் அதில் திருப்தியடையாத காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் மூலம் மயான ரசீதை ஆய்வுக்கு உட்படுத்தினர். சந்தேகத்தின்பேரில் குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தை தோண்டிப் பார்த்தப்போது, அங்கு எதுவும் இல்லாததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ந்தனர். அப்போதுதான், அந்த ரசீது போலி என்பதும், காப்பக நிர்வாகிகள் சொன்னது அத்தனையும் பொய் என்பதும் தெரியவந்தது.

75 வயது முதியவரின் உடலை அடக்கம் செய்த ரசீதில், தேதி மற்றும் பெயரை மாற்றி குழந்தையின் இறப்பு ஆவணம் என நிர்வாகிகள் ஆடிய நாடகம் அம்பலமானது. சரி, இறந்ததாகக் கூறப்படும் குழந்தையின் உடல் அங்கு இல்லை என்றால், குழந்தை எங்கே என்பதைக் கண்டறிய விசாரணையில் இறங்கியது காவல்துறை. அப்போதுதான், அதிகாரிகளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அந்தத் குழந்தை இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த நகைக்கடை அதிபரிடம் 5 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டதை அவர்கள் கண்டுபிடித்தனர். அதனைத்தொடர்ந்து காணாமல் போனதாக கூறப்பட்ட மற்றொரு பெண் குழந்தை, கருப்பாயூரணி அருகே கல்மேடு பகுதியில் உள்ள நபருக்கு விற்கப்பட்டதும் தெரியவந்தது.

தலைமறைவான காப்பகத்தின் தலைமை நிர்வாகி சிவக்குமார் தேடப்பட்டுவரும் நிலையில், அவரின் கணினி மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை பறிமுதல் செய்திருக்கும் காவல் அதிகாரிகள் வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளனர். அதன்பின், இதயம் அறக்கட்டளை காப்பகத்தில் உள்ள சிறுவர்கள், முதியோர் என 82 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, அந்த காப்பகத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஒரு மாதத்திலேயே 2 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் காப்பக்கத்தில் இன்னும் எத்தனை குற்றங்கள் நடந்திருக்கும் என எழும் சந்தேகங்கள் மிரட்சியை ஏற்படுத்துகின்றன. அதற்கு விடை காண விசாரணையில் இறங்கியிருக்கிறது காவல்துறை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com