கடந்த 12 ஆம் தேதி மரக்காணத்தில் விஷச்சாராயம் குடித்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்த நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு சம்பவத்திலும் சேர்த்து மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்விவகாரம் குறித்து விசாரணை செய்த தமிழக போலீசார், இச்சாராயங்களில் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்து கொடுக்கப்பட்டதை அறிந்தனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்த நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர், வியாபாரிகளுக்கு மெத்தனால் கெமிக்கல் கொடுத்து உதவியது தெரியவந்தது.
அடுத்தடுத்த விசாரணையில் ஏழுமலை, வில்லியனூரையடுத்த கரசூரில் கெமிக்கல் விற்பனை செய்யும் தொழிற்சாலை நடத்தி வந்ததும், அங்கிருந்து சாராய வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து நேற்றிரவு புதுச்சேரிக்கு சென்ற தமிழக போலீசார், ஏழுமலை மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பரக்கத் அலி ஆகிய இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.