செய்தியாளர்: ஸ்ரீதர்
கடலூர் மாவட்டம் காராமணி குப்பம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த கமலேஸ்வரி, அவரது மகன் சுகந்தகுமார், சுகந்த குமாரின் மகன் நிஷாந்த் ஆகிய மூன்று பேர் கடந்த 12ஆம் தேதி இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டு 14ஆம் தேதி இரவு தீ வைத்து எரிக்கப்பட்டனர். இந்நிலையில், உடல் எரிக்கப்பட்டதால் சுற்றுவட்டாரம் முழுவதும் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால், கமலேஸ்வரி பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர், கைரேகை நிபுணர் தடையவியல் நிபுணர் மோப்பநாய் உதவியோடு தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பக்கத்து வீட்டில் ரத்தக் கரைகள் இருந்ததை அடுத்து அந்த வீட்டில் இருந்தவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ஆனால், திடீர் திருப்பமாக காராமணி குப்பத்தைச் சேர்ந்த சங்கர் ஆனந்த் மற்றும் சாகுல் ஹமீது ஆகிய இருவர் இந்த கொலையை செய்திருப்பதாக இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து கமலேஸ்வரி அணிந்திருந்த சில நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சங்கர் ஆனந்த் அளித்த வாக்குமூலத்தில், “காராமணிக்குப்பம் ரயில்வே ட்ரேக்கில் விழுந்து எனது அம்மா தற்கொலை செய்து கொண்டதற்கு முக்கிய காரணம் சுகந்தகுமார்தான். அதனால் அவரை தீர்த்துக்கட்ட கடந்த ஆறு மாதமாக திட்டமிட்டு ஜூலை 13 ஆம் தேதி சுதன்குமார் வீட்டுக்குள் புகுந்து அவரை மட்டும் கொலை செய்ய முயற்சித்த போது, அவரது அம்மா கமலேஸ்வரி என்னை தடுக்க முயன்றதால் இருவரையும் கொலை செய்தேன்.
இதையடுத்து சிறுவனை வெளியில் விட்டால் நடந்த விஷயங்களை சொல்லிடுவான் என்பதால் அவனது முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கழுத்தை அறுத்து கொலை செய்தேன். இதைத் தொடர்ந்து மறுநாள் (ஜூலை 14 ஆம் தேதி) நண்பர்களுடன் சென்று பெட்ரோல் ஆசிட் ஊற்றி மூன்று பேரையும் எரித்தோம். பின்னர் பீரோவில் இருந்த பணம் நகைகளை எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டிவிட்டு தப்பித்தோம். போலீஸ் கண்டு பிடிக்காது என நினைத்தோம்” என்று தெரிவித்துள்ளார்.