திருக்கோவிலூர் அருகே கர்நாடகாவில் இருந்து கடத்திவரப்பட்ட 3,840 மது பாட்டில்கள் மற்றும் லாரி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தபோவனம் சோதனைச்சாவடியில் அரகண்டநல்லூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக காய்கறி ஏற்றிவந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். அப்போது முட்டைகோஸ் மூட்டைகளுக்கிடையே 80 பெட்டிகளில் 3,840 குவார்ட்டர் மதுபாட்டில்களை கடத்திச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து லாரியுடன் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரை பிடித்து விசாரணை செய்ததில் லாரி, சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமானது என்றும் லாரி டிரைவர் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கிளியூர் கிராமத்தை சேர்ந்த அய்யனார் மற்றும் கண்டாச்சிபுரம் அடுத்த தணிக்கலாம்பட்டு ரவி என்பதும் தெரியவந்தது.
இவர்கள் பெங்களுருவில் இருந்து மதுபாட்டில்களை குறைந்த விலைக்கு வாங்கி கடத்தி வந்து ஊரடங்கை பயன்படுத்தி கிராமப்புற பகுதிகளில் பலமடங்கு விலையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரவி, அய்யனார் ஆகிய இருவரையும் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.