புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் இரண்டு பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக விராலிமலை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்தது.
மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் திருச்சி மாவட்டம் மேக்குடி மற்றும் கரூர் மாவட்டம் ஆண்டாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் கீரனூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 15 ஆம் தேதி பிணையில் வெளிவந்துள்ளதும், தினமும் நீதிமன்றத்தில் இவர்கள் கையெழுத்திட்டு வருவதும் தெரியவந்தது.
இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் விராலிமலை காவல் ஆய்வாளர் வேல்முருகன், உதவி ஆய்வாளர் திருவேங்கடம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கீரனூர் நீதிமன்றம் அருகே வேலுசாமி (40) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 பவுன் தாலி செயின் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அறந்தாங்கி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் வேலுச்சாமி கொடுத்த தகவலின் அடிப்படையில் கரூரைச் சேர்ந்த நந்தகுமாரை (44) போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 12 பவுன் தாலிச் செயின் மற்றும் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து திருமயம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இவர்களிடம் இருந்து மொத்தம் 17 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.