மறைமலைநகர் அருகே நீதிமன்றத்திற்கு சென்றவர்களை கொலை செய்ய காத்திருந்ததாக மூவர் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே மூவரசன்பேட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் கடந்த வருடம் அதே பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய அப்புன் மற்றும் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த இருவரும் மற்றொரு வழக்கிற்காக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக வந்துள்ளனர். இதனை நோட்டமிட்ட ராமச்சந்திரனின் ஆதரவாளர்களான மூவரசன்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் (30), சத்தியமூர்த்தி (27) மற்றும் பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (20) ஆகிய மூவரும் அப்புன் மற்றும் கணேசனை கொலை செய்யும் நோக்கில் பொத்தேரி இரயில் நிலையம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் காத்திருந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அவ்வழியாக ரோந்து சென்ற மறைமலைநகர் போலீசார், நீண்ட நேரமாக ஆட்டோ ஒரே இடத்தில் இருப்பதைக் கண்டு அவர்களிடம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது நீதிமன்றத்திற்குள் சென்றுள்ள இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர்.