பிரபல யூடியூபர்களில் ஒருவராகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பைக் சாகசம் செய்பவர்களில் முக்கியமானவருமாக இருந்து வருகிறார் டிடிஎஃப் வாசன். விளம்பரத்திற்காக பொது இடங்களில் இவர் செய்யும் பைக் சாகசங்கள் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் காஞ்சிபுரம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சாகசம் செய்ய முயன்றபோது விபத்தில் சிக்கினார் டிடிஎஃப் வாசன். விபத்தில் கை எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், அவர் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் கைதும் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கேட்பட்ட ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. குறிப்பாக இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக பைக்கை ஓட்டுகிறார், டிடிஎஃப்-ன் பைக்கை எரித்துவிடலாமே, யூடியூப் சேனலை முடக்கிவிடலாமே என்று உயர்நீதிமன்ற நீதிபதியும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு மட்டுமல்லாது, டிடிஎஃப் வாசன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கோவை, சென்னை, நீலகிரி, கடலூர், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய இடங்களில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, பொதுமக்களை அச்சுறுத்துவது, ஹெல்மட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது என்று பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சமூகவலைதளங்களிலும் டிடிஎஃப் வாசனுக்கு எதிரான அலையே வீசி வரும் நிலையில், பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி டிடிஎஃப் வாசனின் லைசன்ஸை ரத்து செய்துள்ளார் காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ. அதன்படி, 06 .10.2023 - 05.10.2033 வரை டிடிஎஃப் வாசனின் லைசன்ஸ் ரத்தாகியுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் டிடிஎஃப் வாசன் விரும்பினால், அடுத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று கால அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது.