திருச்சியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி புத்தூர் பகுதியில் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. இந்த வங்கியின் முன்பாக உள்ள ஏடிஎம் இயந்திரத்தை அடையாளம் தெரியாத ஒருவர் உடைத்து பணத்தை திருட முயற்சி செய்துள்ளார். ஆனால், இயந்திரத்தை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றுள்ளார்.
இந்நிலையில், வழக்கம் போல காலையில் அலுவலக ஊழியர்கள் ஏடிஎம் பராமரிப்பு பணிக்காக வந்துள்ளனர். அப்போது இயந்திரம் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி செய்த நபர் அந்தப் பகுதியிலேயே சுற்றித்திரிந்து உள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள், வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற அவரை பார்த்ததும் துரத்திப் பிடித்து விசாரித்தனர்.
ஆப்போது அவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தவர் என்பதும் அவர் மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்த அசாருதீன் (20) என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.