புலம் பெயர்ந்த தொழிலாளியின் மகளான 5 வயது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு நெல்வயலில் இருந்து அக்கம் பக்கத்தினர் அக்குழந்தையை கண்டெடுத்துள்ளனர்.
மத்திய கேரளாவின் ஆலுவா பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை அன்று சிறுமியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வயலில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அக்கம் பக்கத்தினரின் உதவியோடு அவர் களமச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் அவருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்க தொடங்கியதில், குற்றவாளி உள்ளூர் பகுதியை சேர்ந்தவராக இருப்பார் என்று சந்தேகிக்கப்பதாகவும், முழு விசாரணை முடிந்த பின்னரே யார் என்று உறுதிபடுத்த முடியும் என்றும் தெரிவித்தனர்.
முன்னதாக, இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர். அதிகாலை 2 மணியளவில் விழித்து பார்த்த தாய் தன்னுடைய மகளை காணவில்லை என அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே சத்தமிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். பின்னர் தேடியுள்ளார். அப்பொழுதுதான் இந்த துயரச் சம்பவம் தெரியவந்துள்ளது.
இதனிடையே, சந்தேகத்திற்கிடமான நபருடன் அந்த சிறுமி நடந்து சென்றதை நேரில் பார்த்ததாக உள்ளூர்வாசி ஒருவர் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். “இயற்கை உபாதைகளுக்காக அதிகாலை 2 மணியளவில் எழுந்தேன். அப்போது மழை நன்றாக பெய்து கொண்டிருந்தது. வெளியே வந்து பார்த்தேன். ஒரு நபருடன் அந்த சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தார்” என்றார். ஆனால், சிசிடிவி காட்சிகளில் இருந்து அந்த நபரை அடையாளம் காண முடியவில்லை என்று அவர் கூறிவிட்டார். நேரில் பார்த்தால் நிச்சயம் அடையாளம் சொல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.