போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவரின் ஜாமின் மனுவுக்கு எதிராக அவரது மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.
ஈரோட்டில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக ராதாகிருஷ்ணன்(37) என்பவர் மீது புகார் தொடரப்பட்டது. அந்த புகாரில் ராதாகிருஷ்ணன் நான்கு ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், அவர் சிறுமியை ஆபாசமாக படம் எடுத்ததாகவும் கூறப்பட்டிருந்தது. அத்துடன் அவர் அந்தச் சிறுமியை இரண்டு முறை கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியுள்ளார். கருக்கலைப்பு செய்யாவிட்டால் ஆபாச படங்களை வெளியிட போவதாகவும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.
இதனையடுத்து மே 2ஆம் தேதி ராதாகிருஷ்ணன் மீது மற்றொரு புகார் அளிக்கப்பட்டது. அதில் அவர் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ராதாகிருஷ்ணன் ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். இதற்கு எதிராக அவரது மனைவி மனுதாக்கல் செய்துள்ளார். அதில் அவர், “ராதாகிருஷ்ணன் பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அது தொடர்பாக பல ஆபாச படங்களை எடுத்து வைத்துள்ளார். காவல் துறையினர் இந்த வழக்கை ஒழுங்காக விசாரிக்கவில்லை. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்கள் மிரட்டப்பட்டு வருகின்றனர். இதனால் எனது கணவருக்கு ஜாமின் அளிக்கவேண்டாம்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.