திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சடையங்கால் செல்வகுமார். இவர் மீது 2 கொலை வழக்கு, மூன்று கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு தனது அத்தை மகன் ராஜ்மோகன் என்பவரை காரில் கடத்தி கொலை செய்தார்.
இதனையடுத்து இந்த வழக்கில் அவர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அங்கு பணியில் ஈடுபட்ட காவலர் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து புதுக்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் ஜாமீனில் வெளியே வந்த செல்வகுமார் கொலை செய்யப்பட்ட ராஜ்மோகனின் சகோதரர் பாலகிருஷ்ணனை மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில், அரித்துவாரமங்கலம் காவல் நிலையத்தில் தொடர்ந்த வழக்கு ஒன்றில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்ததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்தது.
இந்த நிலையில் அரித்துவாரமங்கலம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவலர் சிவானந்தம் ஆகிய இருவரும் பிடிவாரண்ட் நிறைவேற்ற அவரை தேடிச் சென்றனர். அப்போது வீராணம் வெட்டாறு பகுதியில் நின்றிருந்த ரவுடி செல்வகுமார், போலீசாரை கையால் தாக்கியுள்ளார் மேலும் மறைத்து வைத்திருந்த அருவாளால் வெட்ட முயற்சித்துள்ளார்.
சுதாரித்துக் கொண்ட போலீசார், செல்வகுமாரை பிடிக்க முயன்றுள்னர். அப்போது போலீசாரிடம் இருந்த தப்பிக்க அருகே உள்ள வெட்டாற்றில் குதித்துள்ளார். இதில் ரவுடி சடையங்கால் செல்வகுமார் கால் முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.