செய்தியாளர்: மகேஸ்
திருவண்ணாமலை மாவட்டம் நாயுடு மங்கலத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ் (25). இவர், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை வழியாக நாயுடு மங்கலத்திற்கு குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் கடத்திவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையில் உதவி ஆய்வாளர் கருணாகரன், காவலர்கள் சரத்குமார் மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழுவினர் அவலூர்பேட்டை பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது, பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை வழியாக நாயுடுமங்கலம் செல்ல இருந்த இரண்டு வாகனங்களை போலீசார் சோதனை செய்தனர். அப்போது பத்து மூட்டைகளில் குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, கடத்தலில் தொடர்புடைய ஜெகதீஷ் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த பத்து மூட்டைகள் அடங்கிய குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் கைப்பற்றி குட்கா மற்றும் பான் மசாலா ஆகியவற்றின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெகதீஸை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் ஏற்கனவே குட்க கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து வெளிய வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.