செய்தியாளஎர்: சரவணகுமார்
திருப்பூர் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த் (29). மாட்டுத் தீவன விற்பனை நிலையம் வைத்துள்ள இவருக்கு, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் திருமண உதவி செயலி மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சத்யா (30) என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். இருவரும் தொடர்ந்து பேசி வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதற்கிடையே சத்யாவின் உறவினரான தமிழ்ச்செல்வி என்பவரும் மகேஷ் அரவிந்த்-க்கு அறிமுகமாகி உள்ளார்.
இடையிடையே, மகேஷ் அரவிந்த் மற்றும் சத்யா அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். தொடர்ந்து தமிழ்ச்செல்வி மற்றும் சத்யா ஆகிய இருவரும், மகேஷ் அரவிந்திடம் பல்வேறு காரணங்களை கூறி அடிக்கடி பணம் பெற்று வந்துள்ளனர். அவரும் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் மகேஷ் அரவிந்தும் சத்யாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்த நிலையில், கடந்த மாதம் 21ம் தேதி தொப்பம்பட்டியில் இருவருக்கும் தமிழ்ச்செல்வி திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மகேஷ் அரவிந்த், சத்யாவை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவரது உறவினர்கள் தாலிக்கொடி உள்பட 12 பவுன் தங்க நகைகளை சத்யாவுக்கு கொடுத்துள்ளனர். இதையடுத்து சத்யா அடிக்கடி பல ஆண்களுடன் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதனால் அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த மகேஷ் அரவிந்த் அவரது செல்போனை எடுத்துப் பார்த்துள்ளார். அப்போது அதில், ஆண்கள் சிலருடன் சத்யா நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் இருந்ததாக தெரிகிறது. இது குறித்து கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சத்யா திடீரென வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ் அரவிந்த், இது குறித்து தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் “சத்யா என்னை திருமணம் செய்து ரூ.50 ஆயிரம் மற்றும் 12 பவுன் நகைகளை மோசடி செய்துவிட்டார். பலபேரை இதுபோல் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் அவர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் 1 தனிப்படையும் அமைத்தனர். இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில், சத்யா திருமணம் செய்து சுமார் 15 பேரையும், திருமணம் செய்யாமல் 50-க்கும் மேற்பட்டவர்களையும் ஏமாற்றி இருப்பதாக தகவல்கள் பரவின.
இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய தனிப்படை போலீசார், புதுச்சேரியில் பதுங்கி இருந்த சத்யாவை நேற்று முன்தினம் நள்ளிரவு பிடித்து தாராபுரம் அழைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் சத்யா கைது செய்யப்பட்டார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான சத்யா, காவல்நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில் “என் குடும்பத்தை பற்றி தவறாக எழுதாதீர்கள். என் தந்தை தற்கொலை செய்துவிட்டார்கள் என்றெல்லாம் சிலர் எழுதிவிட்டார்கள். இதைவிட வேறென்ன இருக்கு சொல்லவும் செய்யவும்? காசு உள்ளவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நிரூபித்துவிட்டார்கள். நான் வெளியே வந்தபின் என் மீது தவறில்லை என நிரூபிக்கும் எல்லா ஆதாரங்களையும் காட்டுகிறேன்” என்றார் கண்ணீர்மல்க.