செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையம் அருகே பானி பூரி விற்பனை செய்து வந்தவர் சுரேஷ் ஷா (30). இவர், கடந்த 2012 ஆம் ஆண்டு, திருநெல்வேலியைச் சேர்ந்த இளம் பெண் செல்வி (28) என்பவரை ஏமாற்றி காதலித்து திருமணம் செய்து தாராபுரம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி குருப்ப நாயக்கன்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு செல்வி, தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீசார், அங்கு சென்று சாந்தியின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சாந்தியுடன் குடும்பம் நடத்தி வந்த பீகார் மாநிலத்தைச் சார்ந்த சுரேஷ் ஷா என்பவர் சாந்தியை கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த தாராபுரம் போலீசார், கொலையாளியை 11 ஆண்டுகளாக தேடிவந்தனர். இதற்கிடையே டெல்லியில் அவர் இருப்பதாக அப்போதே காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்றுள்ளனர். அப்போது சுரேஷ் ஷா தப்பியோடி தலைமறைவானார். இதைத் தொடர்ந்து தாராபுரம் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையில் கார்த்தி, மதி, ராமர், பாப்புராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கொலையாளியை தீவிரமாக தேடிவந்த நிலையில், அவர் டெல்லியில் இப்போதும் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்ற தனிப்படை போலீசார், சுரேஷ் ஷாவை இம்முறை கைது செய்து தாராபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து அவரை, உடுமலை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கொலை குற்றவாளியை 11 ஆண்டுகளாக விடாமல் பின் தொடர்ந்து நடமாட்டத்தை கண்காணித்து பிடித்த தாராபுரம் போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.