திருப்பூர் சாயப்பட்டறை தொழிலாளி அடித்து கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள கே.நல்லச்சாம்பட்டியை சேர்ந்த மூக்கன் என்பவரின் மகன் கணேசன். இவர் திருப்பூர் அங்கேரிபாளையம் அருகில் உள்ள வெங்கமேடு பகுதியில் இருக்கும் எஸ்.வி., டையிங் என்கிற சாயப்பட்டறையில் உள்ள கோன் வைண்டிங்கில் பணியாற்றி வந்தார். இவருடன் மதுரையை சேர்ந்த ஆனந்தன் என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். இங்கு வேலை செய்பவர்களுக்கு, சாயப்பட்டறை வளாகத்திலேயே தங்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதால், அங்கேயே தங்கி பணியாற்றி வந்தனர்.
(மேலே, உயிரிழந்த கணேசனின் குடும்பத்தார்)
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கணேசனை காணவில்லை என போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார், சாயப்பட்டறையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அந்த பதிவுகளில், கணேசன், ஆனந்தன் இருவரும், டையிங் நிறுவன மாடிக்கு சென்ற காட்சிகள் இருந்தன. ஆனால் ஆனந்தன் மட்டும் இறங்கி வருவதும் கணேசன் மேலே இருந்து வராததும் தெரியவந்தது. இதையடுத்து புலன் விசாரணை செய்த போலீசார் கணேசன் அடித்து கொல்லப்பட்டு, சாயப்பட்டறை நிறுவனத்திலேயே உள்ள சாம்பல் கொட்டும் குப்பையில் சுமார் 3 அடி ஆழ குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பிணத்தை கைப்பற்றிய போலீசார் ஆனந்தன் குறித்து விசாரித்தனர். விசாரணையில் ஆனந்தன், ஞாயிறன்று நடந்த சம்பவத்துக்கு பிறகு திங்கள்கிழமையும் வேலை பார்த்த ஆனந்தன் தலைமறைவாகி விட்டார். இதனால் ஆனந்தன் தான் கணேசனை அடித்து கொன்று புதைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், ஆனந்தனை காவல் துறையினர் தேடி வருகிறார்கள். மேலும் கணேசனின் பிணத்தை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.