திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு அருகே உள்ள காவாபட்டறை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி நதியா. இவர் இன்ஸ்டாகிராமில் சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில், நதியா போடும் ரீல்ஸ் வீடியோவிற்கு அனைத்திற்கும் தொடர்ந்து லைக் போட்டு வந்துள்ளார் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகதீஸ்வரர்(20). அவ்வப்போது நதியாவிடம் இன்ஸ்டாகிராமில் பேசியும் பழகியும் வந்துள்ளார்.
இதனையடுத்து பிரகதீஸ்வரர் வேலை காரணமாகத் திருப்பத்தூர் வருகிறேன் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து, நதியா கணவனுக்குத் தெரியாமல் நீலிக்கொல்லி பகுதியில் கடந்த 27 ஆம் தேதி இரவு நேரத்தில் நதியா, பிரதீஸ்வரரை சந்தித்துப் பேசியுள்ளார். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது பிரகதீஸ்வர் நதியாவிடம் "உன்னுடைய கழுத்தில் போட்டிருக்கும் நகைகள் தங்க நகையா? எனக் கேட்டுள்ளார். அதற்கு நதியா "தாலிச் சரடு மட்டும் தங்கம்" எனக் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து திடீரென கழுத்திலிருந்த தாலி சரடை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பிரதீஸ்வரர் ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நதியா இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பிரதீஸ்வரரை கைது செய்து, அவரிடம் இருந்த தாலி சரடை பறிமுதல் செய்தனர்.
இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு வீட்டிற்கு வரவழைத்த வாலிபர் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.