செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் காடி தெருவை சேர்ந்தவர் முகமது அஷ்வாக். இவர் ஆம்பூரில் உள்ள 20க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் வங்கி பாஸ்புக் உள்ளிட்டவைகளை பெற்றுக் கொண்டு தனியார் நிதி நிறுவனத்தில் அந்த ஆவணங்களை வைத்து 44 ஏசிகளை வாங்கியுள்ளார்.
இந்நிலையில், தனியார் நிதி நிறுவனத்தில் அதேபோல் தாசிம் என்பவரின் ஆதார் கார்டு மற்றும் வங்கி புத்தகங்களை வைத்து ஏசி வாங்கி பணம் செலுத்தாமல் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில், தாசிம் கொடுத்த புகாரில், முகமது அஷ்வாக் கைது செய்த காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பாரூக் மற்றும் ஆம்பூரைச் சேர்ந்த அஸ்ரார் அஹமத், ஆகியோருக்கு குறைந்த விலைக்கு ஏசிகளை விற்பனை செய்துள்ளார். மேலும், அவர் மீது ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர.
கூலித் தொழிலாளிகளின் ஆவணங்களை வைத்து கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் கூலி தொழிலாளிகளை இதில் சிக்க வைத்துள்ளார். இதனால் ’காவல் நிலையத்தில் அடுத்தடுத்து 10-க்கும் மேற்பட்டோர் புகார்கள் கொடுத்ததால் அவரை கைது செய்து சிறையில் அடைத்தோம்’ என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.